உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. எல்லாரும் இதற்கு உரியர்

"எல்லாப் பொருளும் இதன்பால் உள” என்னும் பொருளை முன் கண்டோம். மாந்தராவார், “எல்லாரும் இதற்கு உரியர்" என்பதை ஓரளவில் எண்ணுவோம்.

திருக்குறளைப் பொதுமறை என்றும். தமிழ்மறை என்றும் முந்தையோர் கொண்டனர். அதனை நம்மறை எனக் கண்டார் குறளாயத் தோன்றலும் குறளிய நிறுவனரும் ஆகிய வேலா அரச மாணிக்கனார்.

நம்மறை எனின் சுருங்கிய வட்டமாகி விடுமா? படிப்பவர் தமக்கெல்லாம், கேட்பவர் தமக்கெல்லாம், ஆய்பவர் தமக்கெல் லாம் நம்மறையாகும் போது, ஒருவர் ஒருவராய் உலகளாவிய விரிவுடையதாகி விடும் அல்லவோ! ஆதலால், குறளை ஏற்றுக் கொள்ளும் நெஞ்சுடையார் தம்மையெல்லாம் தன்னகத்துக் கொள்ளும் கொள்கை நூல் சுருங்கியது ஆகாதாம்.

'திருக்குறள் நம்மறை' எனப் புதுவை வேலாயுதனார் தம் ல்ல முகப்பில் இரும்புக் கதவு வார்ப்படத்தில் அமைக்க விரும்பினார். அவ்வாறே செய்ய ஆணையும் தந்தார். வந்த வார்ப் படத்தைப் பார்த்து அதிர்வுற்றார்! ஏன்? “திருக்குறள் நன்மறை” என்று வார்ப்படம் ஆகி இருந்தது. 'நம்மறை' என்பது 'நன்மறை’ ஆக வார்ப்புப் பெற்றதும் பொருட் குறைவு உடையதாகி விடவில்லையே. திருக்குறள் உலகுக்கு வாய்த்த நன்மறை தானே! பிற எம்மறைக்கும் இல்லாத தனிமறை அல்லவா அது!

'நம் நூல்' என்றும் 'நம் தமிழ் நூல்' என்றும் நம் காதலால் மொழிவதா இது? உலகம் ஏற்றுக் கொண்டு உவக்க உவக்கப் பாராட்டும் இவ்வுண்மையைத் தமிழன் உரைப்பதால் தாழ்வாகி விடுமா?

'ஒரு பிரிவினர்க்கே உரிய கோட்பாடுகளைக் கொள்ளாது விலக்கி, உலக மக்கள் அனைவருக்கும் ஒருங்கே பொருந்தும் உண்மைகளை மட்டும் தெரிந்தெடுத்துத் திருவள்ளுவர் மொழிந்துள்ளார்... என்று அறிஞர் துறு (DREW) கூறும் இது திருக்குறளின் விரிவுச்சிறப்பை விளக்குவது அல்லவா!