உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவமும் வாழ்வியலும்

99

அப்பெருந்தகை இன்று இல்லை! அன்று அவர் வாழ்ந்த நாளில், பல்லடம் திருக்குறள் மன்றம் சார்ந்த நல்லன்பர், உயர்பண்பர் திரு. மா. ஆறுமுகம் "திருக்குறள் வேந்தரே, 'தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்' என்ற குறள்மூலம் வள்ளுவர் பெண்ணடிமைத் தனத்திற்கு உடன் பட்டுள்ளார் என்னும் கருத்து, சில அறிஞர்கள் நடுவில் உள்ளது. தங்கள் முடிவென்ன?" என இராமையனாரிடம் வினாவினார். அதற்கு அவர் தந்த மறுமொழி விரிவுடையாது; பலப்பலரும் எழுதியும் பேசியும் வருவனவற்றுக்கு இணையற்ற மறு மொழியாய் அமைவது. ஆதலால் அதனை ஆய்வாளர்முன் எடுத்து வைக்கிறது இவ்வுரை:

66

“அறிஞர்கள் நடுவில் அப்படி ஏதும் கருத்து இருப்பதாய்த் தெரியவில்லை. வெள்ளாடுபோல் நுனிப்புல் மேயும் சில ஆண்,பெண் எழுத்தாளர்கள் நடுவில்தான் அப்படியொரு பிதற்றல் இருக்கிறது.

ஓர் அலி, தன்னை முழுமையுள்ள பெண்ணாகக் காட்ட முயற்சி செய்யும் செயலைப் போன்றதே இவர்களின் ஆராய்ச்சியும் அதன் வெளிப்பாடும். ஏனெனில் இவர்களில் யாரும் திருக்குறளின் உயிர்ப்பை முழுமையாக உணர்ந்தவர்களோ, அதை வாழ்க்கை நூலாய்க் கொண்டு பின்பற்றுபவர்களோ இல்லை. ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக மேற்கோள் காட்டப் படித்தது தவிர, திருக்குறளில் ஆழங்கால்பட்ட அறிவினர் இல்லை.

திருக்குறள் போன்ற ஒரு முழுமுதல் நூலை எழுதவோ சரியாக ஆய்வு செய்யவோ வெறும் கல்வி மட்டும் போதாது. பொருட் பிரபஞ்சத்தின் முழுமுதல் தன்மையைப் புரிந்து கொள்ளும் மெய்யறிவும் கருத்துப் பிரபஞ்சத்தின் முழுமுதல் தன்மையை உணர்ந்து கொள்ளும் மெய்யுணர்வும் வேண்டும். (பிரபஞ்சம் - பேரண்டம்)

காலம் என்ற நான்காம் பரிமாணத்தை உணர்ந்து வென்றவர்கட்கே இவ்விரண்டும் வாய்க்கும். அவர்கள் சொற்களே காலத்தை வென்று நிற்கும் ஆற்றல் பெறும்.

பூமிக்கு எப்படி 2000 ஆண்டுகள் என்பது ஒரு நொடிக்குக் கூட ஈடாகாதோ, அப்படியே ஞானிகளின் சொற்களுக்கும் 2000 ஆண்டுகள் என்பது ஒரு நீண்ட காலம் ஆகாது.