உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. உய்வு தரும் ஒளிநூல்

பெறத்தக்க பேறுகளில் எல்லாம் உயர்ந்த பேறாவது மக்கட் பேறே என்றவர் திருவள்ளுவர்.

ஆனால், அவர் குறித்த மக்கட்பேறு பழிக்கும் பாவத்திற்கும் எடுத்துக்காட்டாம் பிறப்பு அன்று!

கற்று கேட்டு அறிவறிந்து, ஆராயாப் பிறப்பும் அன்று! வீட்டுப் பிறப்பாய் ஒடுங்கி விடுவதும் அன்று! அப்பிறப்பு, "அறிவறிந்த மக்கட்பேறு” எனவும்,

"பழிபிறங்காப் பண்புடை மக்கட்பேறு" எனவும் “மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிய மக்கட் பேறு" எனவும் கூறப்படும்.

அதனையே, “தம்பொருள் என்ப தம் மக்கள்” என்னும் சிறப்பிப்பார்!

பொருளும் பொன்னும் புவியும் பிறவும் தம் பொருள் அல்ல; நன்மக்கட்பெறே தம் பொருள் என்ற அருமை எண்ணி எண்ணிப் பாராட்டத்தக்கதாம்.

மக்கள், பெற்றோர்க்குப் பெருமை சேர்ப்பவர் மட்டுமல்லர்; அப்பெற்றோர் நீடு வாழ்வதற்கு அமிழ்தமாகவும் இருப்பவர் என்பது வள்ளுவ மெய்ம்மை.

அதுவே,

“மக்கள் மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர்

சொற்கேட்டல் இன்பம் செவிக்கு”

“அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்

சிறுகை அளாவிய கூழ்”

“குழலினிது யாழினிது என்பதம் மக்கள்

மழலைச் சொல்கேளா தவர்”

என்னும் குறள்களாம்.