உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

இளங்குமரனார் தமிழ்வளம் 40

குடிநலம் சிறக்கக் குழந்தை நலம் வேண்டும் என்னும் கருத்திலேயே, இல்வாழ்வு விழாவாம் மங்கல மணவிழாவில் வாழ்த்துப் பண் இசைப்பது போல்,

“மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு

என்றார் திருவள்ளுவர்.

இனி, மக்கட்பேறு வாய்க்காமையைப் பெற்றோர் குறையாகத் திருவள்ளுவர் கருதினாரோ? எனின் இல்லையாம்.

மக்கட் பெறாமையை விதிக்குறை என்று மதிக்குறையர் கூறுவதுபோல் கூறினாரும் அல்லர் திருவள்ளுவர்.

பெண் மக்கள் பல பெற்றாலும் ஆண்மகவு பெறாத பெற்றோர் 'புத்' என்னும் நிரயம் சேர்வார் என்னும் புனை புரட்டுக்கு எள்ளத்தனையளவும் டம் தந்தார் அல்லர் திருவள்ளுவர்.

மக்கட்பேறு இல்லார்க்குத் தெய்வமே மகவாகத் தேடி வந்து உதவும் என்பது மண்சுமந்த மதுரைத் திருவிளையாடல் கதையாகும். இக்கதையின் மூலக் குறிப்பு வள்ளுவத்தில் தவழ்கிறது. அது "என் குடியை உயர்த்துவேன் என்னும் துணிவோடு பாடுபடுவனுக்குத் தெய்வமே கூலியாளாக கொற்றாளாக வரிந்துக்கட்டிக் கொண்டு வந்து உதவ முந்து நிற்கும்" என்று எழில் தவழத் திருவள்ளுவர் உரைப்பது,

"குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும்’

என்பது.

மடிதற்று என்பது உடையை வரித்து கட்டிக்கொண்டு, என்னும் பொருள் தருவதோடு மடிது அற்று (ச் சுறுசுறுப்பாக) என்னும் பொருள் கொள்ளவும் நிற்கும் இரட்டுறலாகும்.

இக்குறளால் மக்கட்பேறு இல்லாமையைப் பழியாகத் திருவள்ளுவர் கொண்டார் அல்லர் என்பது குறிப்பாக விளங்கும். னி, வெளிப்பட விளங்கும் இடமும் உண்டு.

“தக்கார் தகவிலார் என்பது அவரவர்

எச்சத்தால் காணப் படும்”