உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவமும் வாழ்வியலும்

109

என்பார் புதுமூடிப் பார்வையர்! திருவள்ளுவர் "உண்டு என்று உலகத்தார் கூறுவதாக எதனைக் கூறுகிறார்?” என்பதைப் பார்ப்பது அல்லவோ முறை? அவர்.

“பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல்

மண்புக்கு மாய்வது மன்

996

என்று கூறும் குறள்வழியே பொருள் காண்பதல்லவோ மெய்ப் பொருள். அதுதானே வள்ளுவர் வழங்கும் பொருள் “சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான் தாங்காது மன்னோ பொறை” என்று சான்றாண்மையிலும் அதனைத்தானே கூறுகிறார்? வள்ளுவர் வழங்கும் இப்பொருளை விட்டு வாய் வந்தவாறு கூறுவதா உரை?

“உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து மட்பகையின் மாணத் தெறும்”

883

என்னும் குறளில் வரும் மட்பகைக்கு என்ன பொருள் கண்டனர்? "மண்பானை வனைவார் அப்பானையைச் சக்கரத்தில் இருந்து அறுத்து எடுக்கப் பயன்படுத்தும் கருவி (ஆரம்பம்)” என்றனர். அரம்பம் மட்பகையாகுமா?

மட்பகை என்பது மண்ணே பகையாய் உயிர்க்கேடு செய்வது அல்லவோ? பானைக்கும் கருவிக்கும் பகை என்ன வந்தது? அவை உயிருடையவையா?

“காலாழ் களரின் நரியடும் கண்ணஞ்சா வேலாழ் முகத்த களிறு”

(772)

என்பதில் களர்நிலம் உள்வாங்குதலால் வீறுமிக்க களிறும் நரியால் கொல்லப்படுதலைச் சுட்டுகிறாரே! மண்ணே பகையாக உள்வாங்குதல் அல்லவோ உட்பகையைத் தெளிவாக விளக்குவ தாகும். புதை மணல், புதைசேறு என வழங்கப்படும் உள்வாங்கு நிலமே மட்பகையாகும்.

இவ்வாறு திருக்குறளுக்குத் திருவள்ளுவரே கூறும் உரைதானே தக்கவுரை. அவ்வுரையே முதல் உரையும் முதன்மை உரையும் ஆகும் என்பதில் தடையேதும் இல்லையே!

சான்றாக எடுத்துக்காட்டியவை இவை!

இன்னும் காட்டத்தக்கவை பலவுள!

அவற்றைக் கருதிக் கருதிக் காண்க. இதன் விரிவு தனிச்சுவடியாகவும் வெளிப்படவுள்ளது.