உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

இளங்குமரனார் தமிழ்வளம் - 40

அவற்றுள் மேம்பட்டதெனக் - கூறப்பட்டதை அன்றித் தமிழர் கொண்டொழுகத் தக்க மறைநூலலெனப் போற்றப்படவில்லை. அதனால் இதுகால், திருக்குறளை நம் மறைஎனல் இன்றியமையாக் கடப்பாடாக உள்ளது.

மறை என்பது மறைத்து வைக்கப்பட்டது அன்று; மறை பொருளாய்க் கூறப்பட்டதும் அன்று; மறுத்துக் கூறுவதற்கென எழுந்த எதிர்ப்பு நூலும் அன்று; அது அல்லன கடிந்து நல்லன கொள்ளச் செய்ய எழுந்த பாதுகாப்பு நூல்.

திருக்குறள் நம் மறை என்னும் வித்தினை வேலா ஊன்றினார். ஊன்றிய வித்து முளைக்க வேண்டும். அம்முளையும் பலவாய், பல விடத்தும் முளைக்க வேண்டும். வித்தூன்றி வேலாவால் மட்டுமே பலவிடங்களிலும் பல காலத்தும் வித்தூன்ற இயலாது. அதனை ஊன்றவும் முளைக்கச் செய்யவும் ஆங்காங்குப் பலப் பல தொண்டரும், சான்றோரும் ஆன்றோரும், ஈகரும், செல்வரும் முந்துறவேண்டும்; முனைந்து கடனாற்ற வேண்டும்.

“கனிதந்தால் கனி உண்ணவும் வல்லிரோ" என அழைப்பவர் வேலா. இப்படி ஒருவர் ஓரிடத்திருந்து அழைத்தால் போதாது. பலர் பல விடத்தும் பல காலத்தும் அழைக்க வேண்டும்! பயன்பாடு கொள்ளத் தூண்ட வேண்டும். வளர்ந்து செழித்துள்ள இராமகிருட்டிண விவேகானந்தர் அமைப்புகளை எண்ணுங்கள். உலகளாவிய அளவில் எத்துணை அமைப்புகள்! எத்துணைத் தாண்டர்! தொண்டுகள்! ஒரோ ஓர் இராம கிருட்டிணர்! அவர்க்கு ஒரோ ஒரு விவேகானந்தர்!

விவேகானந்தர் தூயர்; தொண்டர்; அறிவர்; நாவலர்; கட்டுரைத் திறத்தர்! அவர் பணி, ஒரு நூற்றுவர்க்கு மேற் பட்ட பரப்புநரை உருவாக்கிற்று! பல்லாயிரம் தொண்டர்களை உருவாக்கிற்று! பல்லாயிரம் அமைப்புகளை உருவாக்கிற்று!

விவேகானந்தர் தொண்டின் விரிவாக்கம் எப்படி ஏற்பட்டது? கிறித்தவத் தொண்டர் முன்னின்றனர். அவர்தம் பரப்புதல் கண்முன் காட்சியாயிற்று. மருத்துவம், கல்வி, முதுமை பேணல், வறியர்க்காப்பு, தொழிலகம், தொண்டு நிறுவனம், தொண்டர் பயிற்சி, துறவோர் பயிற்சி இன்ன இன்ன துறைகளை வளர்த்தது அமைப்பு. ஊராரை ஊட்டி வளர்க்க, ஊர், அமைப்பை ஊட்டி வளர்க்கலாயிற்று, கொண்டும், கொடுத்தும் கண்ட ஆக்கப் பேறுகள் இவை.