உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவமும் வாழ்வியலும்

127

வாழ்வியலுக்கு மறை என்பதும் சமயம் என்பதும், வழிபாடு என்பதும் கடைப்பிடி என்பதும், நோன்பு விழா என்பனவும் இன்றியமையாதன. கடவுள் இல்லை என்பாரும், கடவுள் இயற்கையே என்பாரும் அதனைக் கூறியவர் மேலும், அதன் மேலும் கொண்டுள்ள பற்றுமை வெறியாக அல்லவோ உள்ளது! அவர்கள் அக்கொள்கைகளில் கொண்டுள்ள அசையாத நம்பிக்கை அந்நம்பிக்கை இல்லார்மேல் கொள்ளும் சீற்றம் இன்னவற்றை நோக்க அவர் அக்கொள்கைகளையும், கொள்கையுடையாரையும் றைமையாகக் கொண்டுள்ளமை புலப்படும். அவர்கள் முழக்கம், விழா, சுவரொட்டி, பறைசாற்று எல்லாம் கடவுட் கொள்கையாளர் செயலுக்குப் பின்னடைந்தனவா? இவற்றால் விளங்குவது என்ன? ஒவ்வொருவர் உளத்திற்கும் சில கொள்கை கோட்பாடுகள் வேண்டும்; அவற்றை இல்லாமல் வெறுமைப் படுத்தி விடக்கூடாது. அவ்விடம் வெறுமையுற்றால் ஏறக்கூடாதன் ஏறிக்கொள்ளும். புகக்கூடாதன புகுந்து கொள்ளும் என்பனவே. திருக்குறள் நம்மறை என்ற அளவில் குறளைக் காட்டி அமைதல் சாலாது. செயல் திட்டங்கள் வழிபாட்டுநெறிகள் - இசைஆடல் விழாக்கோலம் இன்னவெல்லாம் வேண்டும்.

இவற்றைக் குறள்வழிஞர் வகுத்தும் - தொகுத்தும் தந்து நடைமுறையாக்கத் தூண்டலாக விளங்க வேண்டும். ஒரு சில இடங்களிலேனும் இவற்றின் செயலாக்கக் கிளைகளை உருப் படுத்துதல் வேண்டும்.

-

காலவெள்ளம் ஒரு நொடியளவில் கூட கண்மண் தெரியாமல் அள்ளிக் கொண்டு போய்விட வல்லது. அதற்கு ஆட்பட்டு அழிந்து படாமல் வலிய பாறைமேல் கோட்டை எழுப்பிக் கோயில் எழுப்பிக் காத்தல்போல், உறுதியான அடித்தளத்தில் நம்மறை என்னும் கட்டுமானம் திகழவேண்டும். அதுவும் நாளை நாளை என்னின், நாளை என்பது இல்லதாய் மறப்பாய் மறைவாய் கனவாய் மின்னலாய் ஒழிதல் உண்டாம்.

-

உலகொளி பரப்பவந்த எழுஞாயிறு திருக்குறள். நம் அறியாமை அறிவிக்காமைத் திரைகளால் நாம் மறைத்துக் கொண்டிருக்கின்றோம். உலகோர் அறியச் செய்யத் திரைய கற்றும் பணியை மூச்செனக் கொள்ளும் முனைப்புச் செயல் வேண்டும்.