உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் நோக்கு

147

மன மாசு இல்லான் தன்வீட்டுச் சாய்க்கடையோ வடிகாலோ ஆறு, கால்வாய்களில் கலக்கவிடான்.

மன மாசு இல்லான் வீடு சூழ நீரைக் கட்டுக்கிடையாக்கிச் சேறும் செதும்பும், குப்பையும் கூளமும் செதும்பவிட்டுக் கொசு உண்டாக்கியாய், நோய் பரப்பியாய் ஆகான்!

மனமாசு இல்லான், சாலையில் செல்லும் தன் வண்டியில் நச்சுக் கரிப்புகையும் நடுக்கமுறத்தும் ஒலியும் உயிர் பறிக்கும் கடுவிரைவும் உண்டாகவிடான்!

மனமாசு இல்லான், அண்டை வீட்டார் அமைதி இழக்க செவிப்பறை வருந்த-ஒலியிழையைப் பாடவிடான்!

மனமாசு இல்லான், நடுத்தெருவில் காறி உமிழான்! நடக்க வாய்த்த சாலையை நாறச் செய்யான்! இப்படி இப்படி, எத்தனை எத்தனையோ சொல்லலாம்!

மனமாசு நீங்கும் பொழுது, பிறர் பெறும் இன்பமெல்லாம் தான் பெறும் இன்பமாகவும், பிறர் பெறும் துன்பமெல்லாம் தான் பெறும் துன்பமாகவும் கொள்ளும் பெருநிலை உண்டாகி விடுகின்றது. ஆதலால், சூழலைக் கெடுக்கும் கேடு அவனை விட்டு ஒழிகின்றது. இயல் நலத்தைக் காக்கும் இயல்பு பெருக் கெடுக்கின்றது.

பிற உயிர் துடிக்கும் துடிப்பும், தான் துடிக்கும் துடிப்பும் ஒன்றே என்ற உயர் நிலையை எய்திவிடுகின்றான் மனமாசில்லான்!

அதனால் அவன் கற்கும் கல்வியிலும் கற்பிக்கும் கல்வி யிலும் மாசு இல்லை. அவன் கண்டுபிடிக்கும் கண்டு பிடிப்பிலும் அதன் பயன்பாட்டிலும் இல்லை. அவன் கொண்டொழுதும் கொள்கையிலும் குறிக்கோளிலுமாக இல்லை! அவன் மாந்த உருவில் நடமாடும் அறவியங்கடவுள் ஆகின்றான்! அவன் அலந்தோர்க்கு மடிதற்றுச் சென்று உதவும் மாமாந்தன் ஆகின்றான்! அவன் வாய்மொழி நாட்டின் வாய்மை மொழி ஆகிவிடுகின்றது. அவன் வாழ்வு, அறவாழ்வாக உலகம் காக்கின்றது! “மன அறமே மாணறம்" என, அறமே, அறமுத்திரை பதிக்கும் மாண்பு வாய்த்து விடுகின்றது! ஆதலால் வாழிய மன அறம்! வாழிய உலக நலம் என்பது வள்ளுவ நோக்கு.