உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

இளங்குமரனார் தமிழ்வளம் 40

டி

முகிலின் கருநிறத்தையும், மின்னல் ஒளியையும், கடிய இடி ஒலியையும் கொண்டு 'காளி'யைக் கண்டனர். இடி மின்னலின் பின்னே கொட்டிய மழையிலே ‘மாரி' யைக் கண்டனர்! காளியும் மாரியும் காப்புக் கடவுள் என்பதை உணர்ந்து போற்றி வழிபாடு செய்தனர்!

மழையின்றி மாநிலத்தார்க்கு இல்லை” என்றனர்!

"மழையின்றி மாநிலத்தார்க்கு என்ன இல்லை?”

என எண்ணிய வள்ளுவர் உயிர்வகை எவையும் இல்லை என்றார். பயிர் வகை உண்டா? அவையும் உயிர்வகை தாமே! உயிர்வகை எவையும் இல்லை என்றால் எந்தப்பயிர் வகைதான் உண்டு?

புல்லா பூண்டா, கிழங்கா கீரையா, செடியா கொடியா, மரமா மட்டையா எவையுண்டு?

ஓரறிவு உயிரியாம் பயிர் வகையே இல்லாக்கால். ஈரறிவு முதலாம் உயிரிகளாகிய புழு, பூச்சி, ஈயல், எறும்பு, நண்டு, நத்தை, உடும்பு, ஒந்தி,பாம்பு, பல்லி, பறவை, பார்ப்பு, கன்று, காலி, குரங்கு குட்டி, மாக்கள் மக்கள் உண்டா?

இவையெல்லாம் மழையில்லையேல் இல்லை என்பதற் காகவா இன்றியமையாச் சிறப்பினதென 'வான்' சிறப்புப் பாடினார் வள்ளுவர்.

அறம் பாட வந்தவர்க்கு, மழையைப் பாடுதலா அறம்? அதனை வாழ்த்தின் பயன் என்ன? பழிப்பின் பயன் என்ன? வாழ்த்தினார்க்கு மிகவும், பழித்தார்க்குக் குறையவும் தருமோ அது?

"மாரிதான் சிலரை வரைந்து பெய்யுமோ?

என வினாவுமே கபிலரகவல்.

மழையைப் பாடும் வள்ளுவ நோக்கு அழகியது! ஆழமிக்கது!

'ஒழுக்கம்' என்பது நீர் ஒழுக்கத்தையே முதற்கண் குறித்தது. அவ்வொழுக்கமே நடையொழுக்கத்திற்கு உவமை ஆகியது, நீரில் இருந்து தோன்றிய பண்பே 'நீர்மை'!

நீர் செல்லும் வழியும், வழியே!

அது செல்லும் ஆறும் வழியே!