உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. முயற்சிச் சிறப்பு

"முயற்சியால் செல்வம் சேர்க்கலாம்: முயற்சி இல்லா மையால் தன்னையே அன்றித் தன்குடியையும் கெடுக்கலாம்' என்று திருவள்ளுவர் கூறியதைக் கண்டோம்.

'முயற்சி' என்பதற்கு ஓர் அரிய சொல்லாட்சியை வழங்கினார் திருவள்ளுவர். அது, 'ஆள்வினை' என்பது.

திருவள்ளுவர் விரும்பும் நன்மக்கட்பேறு 'அறிவறிந்த மக்கட்பேறு" மேலும் அவர் விரும்புவது, "பழி பிறங்காப் பண்புடை மக்கட்பேறு

99

இம் மக்கட் பேறு என்னும் மாண்பு அமைந்தும், முயற்சி இல்லார் ஆகித் தன்னையும் தன்குடியையும் கெடுக்கும் வீணனையும் வீணியையும் 'ஆள்' என்னலும் ஆகாது எனக் கருதுகிறார்.

மாசுப் பிறப்பை மாண்பிறப்பென ஒப்ப அவர் மனம் காண்டார் இல்லை! கண், காது, வாய் என்னும் பொறிகள் செயலாற்ற வல்லனவாய் அமைந்தும், செயல்படாச் சிறுமைப் பிறப்பை ‘ஆள்' என்னும் பெருமைப் பெயரால் அழைத்தலும் ஆகாது என்பாராய்,

“பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து ஆள்வினை இன்மை பழி”

என்றார்.

ஆணும் ஆளே; பெண்ணும் ஆளே; பிள்ளையும் ஆளே. "ஆளுக்கு ஒன்று கொடு”, “எத்தனை ஆள் வேலை செய்தார்கள்” என்பவை வழங்குமொழிகள்.

ஆள் அனைவருக்கும் உரிய பொதுவினை, ஆள்வினை; ஆள் அனைவருக்கும் உரியதே ஆளுமை; ஆள் அனைவருக்கும் உரியதே ஆட்சி! - இவற்றை உணர்த்தும் அருமைச் சொல்லே 'ஆள்', என்பதாம்.