உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. மதுவிலக்கு

கிளித்தட்டு விளையாட்டுப் போலத் தடுப்பும் எடுப்புமாக நாட்டில் நடந்து வரும் கூத்து 'மதுவிலக்கு' என்பது.

ஆங்கிலவரை அகற்றுவதற்கு மதுவிலக்கும் கூட ஒரு கருவியாகப் போற்றப்பட்ட காலம் இருந்தமை முதியர் அறிவர். கள்ளுக்கடை மறியல்' சாராய ஒழிப்பு' 'மதுவிலக்கு'

என்றெல்லாம் உணர்வு மூண்டு நின்ற நிலை.

'குடியைக் கெடுக்கும் குடியை ஒழி' என்றவர்களும் ஆட்சிக்கு வந்து அவ்வொழிப்பை மறக்கலாயினர்; தளரலாயினர். மற்றவர் களோ, அத்திட்டத்திற்கு மூடுவிழாச் செய்து விட்டனர்.

குடி கெட்டாலும் குற்றமில்லை! பொருள் வருவாய் வேண்டும் என்ற முடிவில் நின்று விட்டனர். நேர் வருவாய் அரசுக்கு, மறைமுக வரவாய் மதுவிலக்குத்துறை, காவல்துறை ஆகிய மற்றவற்றுக்கு!

கூடிய வெறி வேண்டும் எனின், 'கள்ள மது' வேண்டுமே! காய்ச்சினால் என்ன? காசுதான் கைக்கு வருகிறதே! வீடு கெட்டால் என்ன, நாடு கெட்டால் என்ன?

'குடியரசு, குடியாட்சி' என்பவற்றிற்கு இப்படியொரு பழிப்பெயரும் உண்டாகும் என்று அப்பெயரைச் சூட்டியவர்கள் அறிவரா? திருவள்ளுவர் நாளில் கள்ளும் மதுவும் விருந்துப் பொருளாகவும் வீட்டுப் பொருளாகவும் இருந்தமையைச் சங்க இலக்கியம் வழிய வழியக்காட்டுகின்றது!

கபிலர் என்ன, ஔவையார் என்ன குடியில் திளைத்தனர். பாரி என்ன, அதியமான் என்ன பரிவாக ஊட்டியும் உண்டும் திளைத்தனர். பாரியின் பறம்பு மலைக்கல்லை மது உருட்டிக் கொண்டு வருமாம். மதுவை உலையாக ஊற்றி உணவாக்கு வராம்! அதியமான் வெறியேற்றும் அடிமண்டி மதுவை ஒளவைக்குக் குடிக்கத்தருவனாம். தான் தெளிவைக் குடிப்பனாம்!