உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. சுடச்சுடரும்

எங்கே சூடுண்டு? அங்கே சுடருண்டு!

சூடிலா ஒன்றில் சுடரில்லை! ஞாயிற்றின் செங்கதிரா, செந்தீயின் வெங்கதிரா, சூடும் உண்டு! சுடரும் உண்டு!

மின்சுடரா? நீர்தந்தது, கரிதந்தது, கதிர்தந்தது, - எனின் என்ன? சூடும் உண்டு -சுடரும் உண்டு!

திங்களில் சுடர் உண்டு -சூடு இல்லையே! அது நாள்மீன் அன்று. கோள்மீன்!

கதிரவன் நாள்மீன்; தன்னொளி உடையது; திங்கள் செவ்வாய் முதலியன அவ்வொளியைக் கொள்ளும் மீன்கள்; ஆதலின், கோள்மீன்.

கோள்மீன் கண்ணாடி அன்னவை. மெழுகுதிரியின் ஒளி கண்ணாடியில் படியின் சுடுமா?

சொல்லின் வேரறிந்து, பொருளாட்சி செய்பவர் திருவள்ளுவர். ஆதலால், 'சுடச்சுடரும் பொன்' என்றார். அஃது உவமை; அவர் சுட்டவந்தபொருள், "துன்பம் சுடச்சுட நோற்பவர், ஒளிவிடுவர்" என்பது.

துன்பத்துளெல்லாம்

தலையாய துன்பம் வறுமை. நெருப்பினுள் உறங்கினாலும் உறங்கலாம்; ஆனால் ஒருவர் வறுமை நெருப்பினுள் கண்ணை மூடுதலும் முடியாது!

"நேற்றுக் கொன்று சென்றது வறுமை; அவ்வறுமை இன்றும் வாட்டுவான் வருமோ?" என்று ஏங்க வைப்பது.

அவ்வறுமையுள்ளும் இளமை வறுமை கொடுமையானது. நாற்றங்காலிலேயே நோய் பற்றிப் போனது போன்ற கொடியது. அதனால்,

“கொடிது கொடிது வறுமை கொடிது

அதனினும் கொடிது இளமையில் வறுமை"

என்றார் ஔவையார்.