உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

இளங்குமரனார் தமிழ்வளம் - 40

வறுமை மட்டற்ற துயர் என்றால் மற்றைத் துயர்களும் இல்லையோ? நோய்களின் வாட்டுதல்கள் எத்தனை எத்தனை? பெற்றோரையும் உற்றோரையும், ஏங்குதலும் தாங்குதலுமாக இருந்தோரையும் இழக்கும் இழப்பு எத்தகு கொடுந்துயர்? அதிலும் அறிவறியாப் பருவத்திலேயே இழந்து போகும் ன்னலுக்கு ஆட்பட்டவர் எத்தனை பேர்? நேர்மையால் சால்பால் பொதுத் தொண்டால் பிறர்பிறர் உறுத்தலுக்கு ஆட்பட்ட அல்லல்பட்டவர் எத்தனை எத்தனை பேர்கள்?

இவர்கள் வறுமையால், இழப்பால், பிறர் வாட்டலால் தம் தகவார்ந்த தன்மை குன்றினரோ? இழந்தனரோ? இல்லை என்பதை வரலாற்றுலகம் காட்டும்.

'யான் எளியன்; குடிசையில் பிறந்தவன்; எங்கள் சிறு குடிசையில் பாம்பும் தேளும் ஊர்ந்து செல்லும்' என்று தம் வறுமைக் குடிலைச் சுட்டும் திரு.வி.க.கடைசி மூச்சையேனும் சொந்த வீட்டில் விட நேர்ந்ததோ?

அவர்தம் கல்வி, நோயால் இடை இடை தடையுற்றும் பொதுத் தொண்டால் தேர்வுக்குச் செல்லாமல் பள்ளிக் கல்வியே தடையுற்றும், அவர்தம் கல்வித்தரம் குறைந்துபட்டதா? தொண்டு குறைந்ததா?

‘அந்தண வடிவுக்கு ஒருபடம் காட்டுக' எனின் திரு.வி.க. படத்தையே காட்ட வாழ்ந்த அவ்வாழ்வு சுடச்சுடரும் பொன்னேயன்றோ!

ஆயிரம் ஆயிரமாக வந்த வழக்கறிஞர் தொழிலைக் கைவிட்டு, அயலரசுக்கு எதிராகக் கப்பலோட்டும் கடமையை அள்ளிப் போட்டுக் கொண்டு கடனாற்றினாரே வ.உ.சி. அவர், செல்வத்தில் என்றேனுந் திளைத்தாரோ?

எந்த அயலவர்க்கு எதிராகக் கப்பல் ஓட்டினாரோ, அந்த அயலவரிடமே தம் கப்பலை விற்ற கொடுமையை அன்றோ கண்கலங்கிக் கண்டார்! கடுஞ்சிறையினும் - கல்லுடைப்பினும் செக்கிழுப்பினும் கொடுமையாக இருந்தது அஃதன்றோ!

அவர்பட்ட துயர் அவரை அசைத்ததா? நாட்டுத் தொண்டு மொழித் தொண்டாகக் திகழ அன்றோ அழியாப் புகழ் பெற்றார். மாசற்ற மணியாக அன்றோ திகழ்ந்தார்!

வறுமை அவர் பண்பைக் கெடுத்ததா? கொடுத்த கையூட்டாகக் கொடுத்த ஓரிலக்கம் வெண்பொன்னையும்

-