உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளில் ஒப்புரிமை

251

புல்லிதழ் பூவுக்கும் உண்டு!

குறையிலார் ஒருவரும் இரார்!

என்பதொரு பாட்டு!

"கொன்றன்ன இன்னா செயினும் அவர் செய்த நன்று ஒன்று உள்ளக்கெடும்" என்பது வள்ளுவம்.

கொடுமையிலும் கொடுமை செய்தாலும் ஒரு காலத்து ஒரு நன்மை செய்திருப்பின் அதனை எண்ணிப் பார்த்துப் பின்னே செய்த கொடுமையை மறத்தல் வேண்டும் என்னும் வாழ்வியல் தெளிவு செய்யும் திருக்குறளா, நூற்றுக்கு நூறும் ஒப்புப் பார்த்து உறவாடு என்று கூறும்?

உனக்கும் அவனுக்கும் ஒத்த இயல்புகள் பல இல்லை எனினும் சிலவேனும் இருக்கும்! அவற்றைப் பார்த்து அவ்வளவில் நெருக்கமாக இரு! உன் நெருக்கம் அவனிடம் மேலும் மேலும் ஒப்புகளை உருவாக்கும்! அப் பண்பு ஒப்பு பின்னே இருபாலும் வளர்ந்து வளர்ந்து பெருகும்! அப்பெருக்கும் நலத்தைப் பெருக்கும்! நட்பைப் பெருக்கும்! நயத்தைப் பெருக்கும்! உயிரொப்பு ஆகிச் சிறக்கும்! அந்நிலையில் சாவா ஒப்பாகி ஓங்கும்! அவ்வெற்றி 'மற்றையான், செத்தாருள் வைக்கப்படும்" என்னும் தாழ் நிலையை மாற்றி “என்றும் உயிர் வாழ்வான்” என்னும் மேனிலை யில் வைத்து விடும்.

ஒத்தது என்பது பண்பு ஒத்தது; ஒருவர்க்கும் ஒருவர்க்கும் உள்ள நல்ல பண்புகளில் ஒத்தது; அவற்றையே எண்ணி உறவானால் உயிருள்ளவரை மாறாப் பெருநிலை எய்தும் என்னும் இதனை அறிந்து தெளிந்து சிக்கெனப் பற்றிக் கொண்டால் தனிவாழ்வில் சிக்கல் ஏற்படுமா? குடும்ப வாழ்வில் சிக்கல் ஏற்படுமா? தொழில் வாழ்வில் சிக்கல் ஏற்படுமா? ஏன்? நாடு இன மொழி வாழ்வில் சிக்கல்கள் ஏற்படுமா?

எங்கும் இணைவேயன்றிப் பிளவு இல்லை என்னும் பெருநிலை எய்துமே! அதுவே வள்ளுவப் பெருந்தகை கண்டு காட்டும் வாழ்வியல் ஒப்பாகும்!