உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. பிறப்பு ஒப்பு

இவ்விரண்டு சொற்களும் செந்தமிழ்ச் சொற்கள். செந்நாப் போதார் செப்பிய சொற்கள். ஈராயிரம் ஆண்டுகளின் பின்னரும் பொருள் தெளிவும் திட்பமும் உடையதாய். மயக்கம் இலதாய் வெளிப்பட விளங்கும் சொற்கள்.

‘பிறப்பு ஒக்கும்' என்று குரல் எழுப்ப நேர்ந்த சூழல் என்ன? 'பிறப்பு ஒவ்வா' என்னும் பேச்சு ஊடுருவல் நேர்ந்தபோது, நெஞ்சங் குழைந்த நேயத்தால், நேரிய கூரிய நோக்குடன் 'அந்தோ! பிளந்தும் பிரிந்தும் பிணங்கியும் பெரும்பகையாய்ப் பாழாய் மாந்தர் இனம் கெட்டொழியுமே, அதற்குத் தடையிட்டு நிறுத்தியாக வேண்டுமே' என்னும் பாதுகாப்புணர்வால் நம்மறை அருளிய வள்ளல் திருவள்ளுவர் உரைத்த அருளறமே இச்சொற்கள்!

மேல் வருணம், கீழ் வருணம், தோல் வருணம், தொழில் வருணம், மொழி வருணம், மோது வருணம் எனப் பலவாகப் பகையும் பாழும் ஆட்டங் காட்டுதல் இன்றும் காண வில்லையா? பணவருணமும், கட்சி வருணமும், சாதி வருணமும் போடும் ஆட்டம், இவையெல்லாம் வேண்டா வேண்டா என்ற பகுத்தறி வாளரிடமும் தன்மானத்தவரிடமும் கூடக் கொழுந்துவிட்டுத் தலைவிரி கோலம் காட்டி, உடுக்கடித்தல் இல்லாமலே பேயாட்டம் போடும் கால நிலையில் முந்தைப் பழமையரும் பற்றரும் விட்டு வைப்பரோ?

'விலங்கின் சாதி' ‘நீர் வாழ் சாதி' ‘பறவைச் சாதி' என்ற அளவில் நின்ற 'சாதி'ச் சொல் 'சாதிப்புச்' சொல்லாகி அரசியல் புரியும் கால நிலையில் இச்செந்தமிழ்ச் சொற்கள் இரண்டையும் சொல்லிய வள்ளுவத் திருவாயை வாய்ப்ப வணங்காமல் இருத்தல் கூடுமோ?

'பிறப்பு ஒக்கும்' என்னும் பெருநெறி இல்லமையால், அமெரிக்காவும், ஆப்பிரிக்காவும், இசுரேலும், ஈழமும் இன்ன வரிசை நாடுகளும் காட்டியதும் காட்டி வருவதுமாம் கயமைகள் இவ்வளவு அவ்வளவா?