உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளில் ஒப்புரிமை

253

வல்லரசு, மதவெறி அரசு, நிறவெறி அரசு எனக் கொக்கரிக்கும் அரசுகள் ஆட்டி வைக்கும் அழிசெயல்களுக்கு அளவுதானும் உண்டோ?

பிறப்பு ஒக்கும் என்னும் பெருநெறி மாந்தப் பிறப்பளவில் பொருட்சுருக்கம் கொள்வதோ?

“எத்துணையும் பேதமுறாமல் எவ்வுயிரும் தம்முயிர்போல் எண்ணி உள்ளே ஒத்துரிமை உடையவராய் உவக்கின்ற ஒப்பு அல்லவோ அது?"

"எல்லாரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியா”

அருமையிற் கனிந்தது அல்லவோ அது?

பிறப்பு ஒக்கும் என்னும் பெருநெறியில் கனிந்த கனிகள் அல்லவோ வள்ளலாரும், இத்தாயுமானவரும்!

பிறவி நோக்கு என்ன? எத்தனை உயிரிகள் ஆயின் என்ன? ஆசிரியர் தொல்காப்பியர் ஓரறிவு உயிரிமுதல் ஆறறிவு உயிரி வரை பகுத்து அருளினாரே! தொட்டறவு முதல் நெஞ்சறிவு வரை நெறியாய் உரைத்தாரே! "நேரிதின் உணர்ந்தோர் நெறிப் படுத்தியதாக உரைத்தாரே! அந்நெஞ்சறிவினர் தாமே' "பிறப்பு ஒக்கும்” என்னும் பெருநெறி பேணி ஒழுகத்தக்கார்! அவரிடம் தந்நலச் சிறுமையும் புன்னிலைக் கயமையும் புகலாமா? புகக் கூடாது என்றே புகன்ற செந்தமிழ் மாமணியுரை “பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்" என்பதாம்!

பிறப்பு ஒப்பு உணரின், பிறவிநோக்கு தானே விளங்குமே! பிறவி நோக்குத்தான் என்ன?

துன்ப நீக்கம் என்பது ஒன்று!

இன்ப ஆக்கம் என்பது மற்றொன்று!

துன்ப நீக்கத்தை விரும்பா உயிரி எதுவும் உண்டோ? இன்ப ஆக்கத்தை விரும்பா உயிரி எதுவும் உண்டோ? இவற்றை உணர்ந்த நெஞ்சறிவு நேய அறிவு உடைய உயிரியாம் மாந்தப் பிறவி, பிற உயிர்க்கு பிறர் உயிரிக்குத் துன்ப ஆக்கமும் இன்ப நீக்கமும் நிகழ்த்துமோ?

"இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை வேண்டும் பிறன்கட் செயல்”