உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தரம்:

தரக்கட்டுப்பாடும் திருக்குறளும்

நமக்குத் தேவையான ஒரு பொருளை வாங்கப் போகிறோம். அங்காடியில்உள்ள கடைகளையெல்லாம் கருதி, ஒரு கடைக்குள் புகுகின்றோம். நாம் விரும்பிய பொருளை அங்கேயே வாங்கி விடுவதில்லை. நான்கு கடைகள் பார்க்கிறோம். அக்கடை களிலும், எடுத்துத் தந்த பொருளையும் கண்ணை மூடிக் கொண்டு வாங்கி விடுவதில்லை. தட்டிக் கொட்டி, உருட்டிப் புரட்டி, முழுப்பார்வை பார்த்துப் பின்னர்த் தனித் தனிப் பகுதிப் பார்வை பார்த்து, நம்பொருள் நிலை, கலைநிலை ஆகியவற்றை அளவு கோலாக்கித் தெளிந்து, முடிவு செய்கிறோம். நமக்கு நல்ல நிறைவு தந்தால்தான் வாங்குவோமே அன்றி, 'ஏதோ ஒன்று' என வாங்க மாட்டோம்.

ஒரே ஒரு வேளை பயன்படுத்தும் பொருளானால் என்ன, காலமெல்லாம் வைத்துப் போற்றும் பொருளானால் என்ன, நாம் தரம் கருதாமல் வாங்கி விடுவதில்லை. ஆதலால், தரம் என்பது ஒவ்வோர் தேவைக்கும் தேடுதற்கும் உரிய பொதுப் பார்வையது என்பது புலப்படும்.

எவரின் தேடுதற்குரிய தரத்தை, எவர் ஆக்கிச் சந்தைக்குக் கொண்டு வருகிறாரோ, அவர் பொருள்கள் சந்தையில் பெருந்தேவை யுடையவையாய் விலையாகின்றன. தரக்குறைவு உடையவையோ, கட்டுக் கிடை' யாய்ச் சீந்துவாரற்றுக் கிடக்கின்றன.

'ஏதோ ஒன்று இந்த நொடியே வாங்கியாக வேண்டும்; அதுவும் இந்தப் பொழுதுக்கு மட்டும் ஆவதுதானே என்னும்' பொருளையல்லாமல், நிலைத்த பயன்பாடுடைய எந்தப் பொருளையும் தரம்பாராமல் எவரும் வாங்கிவிடுவது இல்லை. ஆதலால், தரம் நிரந்தரம் என வணிகர் விளம்பரமும், பொது மக்கள் அல்லது நுகர்வோர் தேவையும் ஆயிற்றாம்.