உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. திருக்குறளில் தொழில் தரமும் உறவும்

இந்த ஆய்வு திருக்குறள் வழியது. இது மூன்று பகுதிகளை யுடையது. அவை தொழில்; தொழில் தரம்; தொழில் உறவு என்பனவாம். எடுத்துக் கொண்ட பொருள்களின் மூல வைப்பக மாகவும் ஊடகமாகவும் இருப்பது திருக்குறள். ஒவ்வொரு செய்தியும் குறிப்பும் அதன் வழிப்பட்டதாகவே அமையும். அதனை நிறுவும் சான்றுகள், வேண்டும் அளவில் பிறநூல்களில் இருந்தோ, வரலாறுகளில் இருந்தோ, நடைமுறை எடுத்துக் காட்டுகளில் இருந்தோ தரப்படும். அவை மூலப் பொருளுக்கு உதவியாய் அமைவனவாம்.

1. திருக்குறளில் தொழில் :

தொழில் என்பதில் 'தொழு' என்பது அடிச் சொல். 'இல்' என்பது சொல் இறுதி நிலை. தொழுதற்கு இடமாக இருப்பது தொழில் ஆகும். "செய்யும் தொழிலே தெய்வம்" என்பது எங்கும் வழங்கும் பழமொழி. செய்தல், செயல் என்பவை செம்மை வழிப்பட்ட சொற்கள் என்பதை அறியின் அதன் சிறப்பு விளங்கும்.

தொழில்களில் தலைமை கொண்டது உழவு; மற்றைத் தொழில்கள் அதன் வழிப்பட்டவை. அவை, 'கை செய்' தொழில் களாகத் திருக்குறளில் வழங்கும். உழவும் 'கை செய்' தொழிலே; அத்தொழிலைச் செய்வார் எவரும், தாம் புரியப்புகும் தொழிலைக் கைகூப்பி வழிபட்டே தொடங்குதல் நடைமுறை உழுவார் ஆகட்டும், கொல்லர் தச்சர் சிற்பர் எவராகட்டும், அக்கருவி களைக் கைகூப்பி வணங்கியே தொழிலைத் தொடங்குதல் கண்கூடு.

தொழுது தொழிலைத் தொடங்கி உலகைக் காக்கும் கையை, உலகம், தொழுதலைத் தன் கடமையாகக் கொண்டது. ஏனெனில், அவர் உழைப்பால் பெற்ற வளத்தால் தானே உலகம் வாழ்கின்றது. அந்நன்றி கருதி உலகம் (உலகோர்) தொழுதது. இதனையே,