உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. முதல் இழப்பு

வள்ளுவர் வாழ்ந்த நாளுக்கும் நாம் வாழும் நாளுக்கும் உள்ள நெட்டிடை வெளி பெரிது! நாள் வழி நடைமுறைகளிலும் டைவெளி மிகவுண்டு.

அவர் நாளில் பண்டமாற்றே பெருவழக்கு! நம் நாளில் பணமாற்றே பெருவழக்கு! அவர் நாளில், வாழ்வியல் நடை முறைகளில் பெரு விரைவு இல்லை; இப்பொழுது ஓட்டம்! ஓட்டம்! பேரோட்டம்!

காரெனக் கடிது செல்லோட்டம். எனினும், வள்ளுவர் அந்நாளில் சொல்லிய சொல், இந்நாளில் நூற்றுக்கு நூறு ஏற்புடையதாக இருப்பது வியப்பே! வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந்த வியப்பே!

முகவகங்கள் (ஏசன்சி) நாட்டிற் பெருகுகின்றன. கவர்ச்சியாக விளம்பரம் செய்கின்றன. 50 உருபா செலுத்தி 5000, 10000 ஒருபாபெறும் பரிசுப்பொருள் பெறலாம் என ஆர்வத்தை ஊட்டுகின்றன. ஐந்தாறு திங்கள், ஓராண்டு, ஈராண்டு பளிச்சிடு கின்றன.

"நான் ஐயாயிரம் இழந்தேன்; நான் பத்தாயிரம் இழந்தேன்” என்று ஊரும் தெருவும் ஓலமிட ஒருநாள் இரவோடு இரவாக எங்கோ ஓட்டமெடுத்து விடுகின்றன! பிறகு தலையில் அடித்தென்ன? மார்பில் அறைந்தென்ன?

"எவரும் தராத வட்டி; முதல் போட்ட இரண்டாம் ஆண்டே இருபங்கு வளர்ச்சி! ஐயாயிரம் போட்டால் பத்தாயிரம்! பத்தாயிரம் போட்டால் இருபதாயிரம் - இருபத்து நான்கே மாதங்களில் இரண்டு பங்கு!

நீங்கள் இலக்கர்களாக ஆகவேண்டும் என்பதே எங்கள் இலக்கு. இப்படிச் செய்தித்தாள்களில் விளம்பரம்! பகட்டான திறப்புவிழா! படக்கொட்டகைகளில் எல்லாம் ஆர்வமூட்டும் விளம்பரம்!