உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தரக்கட்டுப்பாடும் திருக்குறளும் ஓ

341

காப்பு, காவல், காத்தோம்பல், ஏமம், அரண் என்ப வற்றாலும் ஈட்டலும் காத்தலும் என்பவற்றாலும் உருவாக்கமும் விளை வாக்கமும் கெடாவகையில் போற்றிய சீர்மையை அறியலாம். முன்னுறக் காத்தல், வருமுன்னர்க்காத்தல், எதிரதாக் காத்தல், ஆவதறிதல் என்பனவும் காவலே.தூய்மை,மாசின்மை, புரைதீர்ந்தது என்பவை தரமேம்படுகைச் சான்றுகளாம். "துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி" என்பதில் துய்ப்பு, துப்பு, தூய்மை, வலிமை என்பன பலவும் அடங்கிக் கிடக்கும் அருமை வியப்புக்குரியதாம்.

மழை நீரின் சிறப்பை,

“வானின் றுலகம் வழங்கி வருதலால் தானமிழ்தம் என்றுணரற் பாற்று"

என்று அமிழ்தமாகக் கூறும் அருமையை உணர்ந்தால் நீரின் தரம் போற்றப்படும். சிறப்பு மதிக்கப்படும்.

“நெடுங்கடலும் தன்னீர்மை குன்றும் தடிந்தெழிலி தானல்கா தாகி விடின் "

என்பதை உணர்ந்தால் மழைவளம் குறைவுறாது இருக்கவும், நிலத்தடி நீர் சுருங்காமல் இருக்கவும் மூலமாம் காடுகளை அழியாமல் காப்போம்! அழித்தவற்றுக்கு ஈடாக நட்டு வளர்ப்போம். அந்நிலையில், வள்ளுவர் கூறுமாறு,

“மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையது அரண்”

எனச் சிறந்து விளங்கும். நீரும் மாசின்றி மணி நீராகத் திகழ, மண்வளம் கொழிக்க, மலைவளம் சிறக்க, அணிநிழற் காட்டால் மழைவளம் சிறக்க நாடு நலங் கொழிக்கும். அந்நிலையில் "நாடென்ப நாடா வளத்தன" என்னும் நாட்டின் இலக்கணம் அமைந்த நாடே, தரமிக்க நாடாக உலகு பாராட்ட விளங்கும். இனித் தொழில் உறவு பற்றிக் காணலாம்.