உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவமும் வாழ்வியலும்

25

இழக்கக்கூடாதது ஒன்றே ஒன்று. அந்த ஒன்றை இழக்காத வர்கள் வேறு எத்தனை எத்தனை இழப்புகளுக்கு ஆட்பட்டாலும் அவர்கள் இழப்பாளர்கள் ஆவது இல்லை!

பொருள் இழப்பைப் பொருளால் மீட்கலாம்; கால இழப்பையும் கருத்தாக எண்ணிச் சரிசெய்து விடலாம்; உறவு இழப்பையும் உரிமை இழப்பையும் புறங்காணலாம். வாய்க்காத ஆற்றலையும் வரப்படுத்திக் காணலாம்.

ஒன்றே ஒன்று மட்டும்தான் வேண்டும். அந்த ஒன்று மட்டும் ஒன்றியிருந்தால் ஒன்றென்ன ஓராயிரமும் ஒருகோடியும் ஒன்றும்! அந்த ஒன்றே உள்ளம்! ஊக்கம்! உரம்!

ஊக்கத்தை இழந்து விட்டால் இருக்கும் எதுவும் இருப்பது ஆகாது! ஊக்கம் இருந்தால், இல்லாதவை எவையும் இல்லை! ஊக்கமே எல்லாம்! எல்லாம்! அதனால்தான், உள்ளம் உடைமை உடைமை என்ற திருவள்ளுவர்.

'ஆக்கம் இழந்தேமென் றல்லாவார் ஊக்கம் ஒருவந்தம் கைத்துடை யார்’

என்றும் கூறினார். ஊக்கத்தை ஓரரிய கைப்பொருளாகக் கொண்டவர்களுக்கு ஆக்கம் சேரும். அதுவே வந்து, தானாகச் சேரும். வழிகேட்டு வந்தும் சேரும். உடையை வரிந்து கட்டிக் கொண்டும் வந்து சேரும்; ஊக்கமுடையவன், ஆக்கம் இழப்பது என்பது வரலாறு காணா வரலாறு!

வள்ளுவம் வாழ்வியல் பிழிவு! ஒவ்வொரு குறளிலும் ஆயிரவர் ஆயிரவர் வாழ்வியல் அடக்கம்! அதனை உணர்ந்தவர் வள்ளுவ வழியர்! வள்ளுவ வாழ்வர்!