உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. அறம் சாரா நல்குரவு

'உலகெல்லாம் ஒன்று' என்று எண்ணும் பேருள்ளம் தாயுள்ளம், அவ்வுள்ளம் தெய்வவுள்ளம்.

தன் பிள்ளை தவறு செய்ததாகக் கேட்டால் கூட, அதனை நம்ப மறுக்கும் அன்புள்ளம் அவ்வுள்ளம்.

தன்பிள்ளை தவறு செய்வதை நேரில் கண்டால் கூட, அதனைப் பிறர் சேர்க்கையால் நேர்ந்து விட்டதாகப் பரிவு கூறும் பாசவுள்ளம் அவ்வுள்ளம்!

தன் பிள்ளை அழகிலியாய் இருந்தால் கூட, உறுப்புக் குறையாளியாய் இருந்தால் கூட, அவற்றையெல்லாம் பொருளாக எண்ணாத பொன்னுள்ளம் அத்தாயுள்ளம்!

தீராப் பிணியனாய்ப் பெருஞ்சோம்பனாய்த் தன்பிள்ளை இருப்பினும் கூட, பொருள் முடைப்பொழுதிலும் பொரும லின்றிப் போற்றிப் புரக்குமுள்ளம் அவ்வள்ளல் தாயுள்ளம்!

தான்பெற்ற பிள்ளை தன்னை எவ்வெவ்வகையால் புறக் கணித்தாலும், புண்படுத்தினாலும் அவற்றையெல்லாம் தாங்கிக் கொண்டு, ஊர்மெச்சும் பிள்ளையாக ஒருநாள் காணக்கூடும் என்னும் நம்பிக்கையில் தன்னை மறக்கும் தனியருள் உள்ளம் தாயுள்ளம்!

அத் தாயுள்ளமும் ஏற்றுக்கொள்ளாத - வெறுக்கத்தக்க வறுமை நிலை ஒன்று உண்டு. அதனை வள்ளுவத் தாயுள்ளம் வையக வாழ்வியற் பொருளாக வைக்கின்றது.

தன் மகனைத் தன்னுயிராய்த் தன்னுணர்வாய்த் தன் வாழ்வாய்க் கொண்ட தாயுள்ளம், தன்மகனை அயலான் போல் கருதுமாறு ஒருவகை வறுமை செய்துவிடுமாம்!

எல்லா வறுமையுமா அப்படிச் செய்யும்? இல்லை! ல்லை! என்கிறது வள்ளுவத் தாயுள்ளம்!

தன் மக்களுள்ளும் செல்வம் இருப்பவரிடம் காட்டும் அன்பினும், அஃது இல்லாரிடம் காட்டும் பேரன்பே தாய்க்கு மிக்கிருத்தல் உலகியற்கை!