உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. பகை நட்பு

இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என முக்காலம் கணித்தல் உலகப் பொது வழக்கு, நட்பியல்பை நுணுகி ஆராயும் வள்ளுவர் வேறொரு வகையில் முக்காலங்களைப் படைத்துக் காட்டுகிறார். அவை நட்பாங்காலம், நட்பு பகையாங்காலம், பகை நட்பாங்காலம் என்பவை.

நம் வாழ்வின் ஓட்டத்தை நிகழ்வில் இருந்து பின்னுக்குத் தள்ளி ஓர் ஐங்கணக்கு அல்லது ஐந்தொகைக் கணக்கு போட்டுப் பார்ப்போமானால் வள்ளுவப் பார்வையின் அழகும் நன்கு புலப்படும்.

நம் உள்ளார்ந்த அன்பின் நண்பர் எவர்? அவருக்கும் நமக்கும் நட்பு எந்நிலையில் உண்டாயிற்று? அந்நட்பு நாளும் பொழுதும் பெருகிப் பெருகி வருகின்றதா? நட்பு இடைத் தடைப்பட்டுவிட்டதா? தடைப்பட்டதை அன்றிப் பழிக்கும், பகைக்கும் கூட இடமாகிவிட்டதா?

பழ நட்புப் போயதென்ன? புதுநட்புப் புகுந்ததென்ன? இவை நட்பா? வணிகமா? நடிப்பா? தேவைக்கு வைத்துக் கொண்ட தேர்ச்சியா? தேவை முடிந்ததும் ஓடிய - ஒதுங்கிய -சூழ்ச்சியா?

இவற்றையெல்லாம் சொல்வதா? நினைவதா? நினைந்து பார்ப்பது நமக்காகவா? பிறர்க்குச் சொல்வதற்காகவா?

பிறர்க்குச் சொல்வதற்கு மட்டும் நினைந்தால், நமக்கு ஆவதென்ன?

எத்தனை கோணத்தால் எண்ண வேண்டுமோ? அத்தனை கோணத்தாலும் எண்ணித் தெளிவு செய்ய வேண்டிய செய்தி இது!

ஏன்? என்றும் என்றும் தெளிவிலா வாழ்வாகவே ஒழிந்து விடக்கூடாதே!

சொற்றுணை காண்கிறோம்! வழித்துணை தேடுகிறோம்! வாழ்க்கைத் துணையும் தேடுகிறோம்!