உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

இளங்குமரனார் தமிழ்வளம் - 40

வள்ளுவர் சொல்கிறார்;

“பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு அகநட்பு ஒரீஇ விடல்.

பகைத்துச் சென்றவன் நண்பனாக வருங்காலம் ஒன்று உண்டானால், அவனிடம் முகத்தால் மட்டும் நட்புச்செய்க; அகத்தால் உள்ளத்தால் - நட்பைக் காட்டாது ஒதுங்கிவிடுக!

அவனுக்கு உன் நட்பு இல்லாமையைக் காட்டாதே! அதற்காக உள்ளத்தால் நட்பும் கொள்ளாதே! அந்நிலையில் அவன் பகையை - வெறுப்பை - மேலும் தேடிக்கொள்ளாமல் இருக்க ஒருவழி முகநட்பு!

நீ நம்பிக் கெடாமல் இருப்பதற்குரிய மறை வழி மனவழி - அகநட்புக் காட்டாமை! இரண்டும் போற்று! அவனுக்கும் தீமை இல்லை! உனக்கும் கேடு இல்லை! இது வாழும் வகை என்கிறார்! வள்ளுவரா முகம் வேறாகவும் அகம் வேறாகவும் காட்டச் சொல்கிறார்?

பொய்யா மொழியரா புகல்கிறார்?

திகைப்பு ஏற்படவே செய்யும்? எங்கே சொல்கிறார்? கூடா நட்பிலே சொல்கிறார்! அக் கூடாநட்பினர் எத்தகையர்?

கொல்லர் பட்டடையிலே சம்மட்டி தாக்குகிறதே; அப்படித் தாக்க நினைப்பவர் அவர்; மறைத்து வருகிறார்; ஆனால் நல்லவராகக் காட்டிவருகிறார்!

இனம் போல வருகிறார்; ஆனால், இனமில்லாமையை உள்ளே கொண்டு இனமாக வருகிறார்!

முகத்தால் நகை காட்டி வருகிறார்; ஆனால், அகத்தே வஞ்சம் வைத்து வருகிறார்!

ஒட்டாமையை உள்ளே வைத்து வருகிறார்! ஆனால், எப்படி வருகிறார்? நட்டார் போல் வருகிறார்!

கையால் தொழுகின்றார்; ஆனால். கையுள் கொல்லும் கருவி வைத்துள்ளார்! கண்ணீர் விட்டு அழுகின்றார்; ஆனால், அக்கண்ணுள்ளே வஞ்சம் வைத்துள்ளார்!

தாமே விரும்பி உதவி செய்வார் போல வருகிறார்! ஆனால், போன பின்னே சொல்லிச் சொல்லி நகைக்கிறார்!