உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. மக்கட்கு இறை

சேக்கிழார் ‘மனுநீதிகண்ட புராணம்' பாடினார். அதனை விரித்து உரைநடையாக்கம் ஆக்கிய வள்ளலார் மனுமுறை கண்ட வாசகம் ஆக்கினார். நீதியினும் 'முறை தமிழ்வழக்கில் தனிச்சிறப்புடையது.'

'நியதி' என்பது 'நீதி'யாயிற்று நியதியாவது ஒழுங்குமுறை; ஒழுங்கு ஒழுக்கு ஒழுக்கம் என்பவை, வழிவழியாக வழங்கப் பட்டவை என்னும் பொருளுடையவே.

'முறைமையே இறைமை' என்பது திருக்குறள். 'முறை செய்து காப்பாற்றும் மன்னனை மக்கட்கிறையென்று வைக்கப் படும்' என்பது அது.

கோவலனைக் கொன்ற காவலன், 'இறைமுறை' பிழைத் தோனாகவே சிலம்பில், அரண்மனை முகப்பிலேயே சுட்டப் படுகின்றான். அவன் அறிவறை போகியவன்; பொறியறு நெஞ்சன்; இறைமுறை பிழைத்தவன் என்பவை குற்றச்சாட்டின் மூவடுக்கு.

'முறைவேண்டு பொழுதிற் பதனெளி யோரீண்

டுறைவேண்டு பொழுதிற் பெயல்பெற் றோரே'

என்பது புறப்பாடல் (35) ‘முறை வேண்டிவந்த பொழுது எளிதில் காட்சி தந்து, இனிதில் செவிகொடுத்துக் கேட்டல், மழைவேண்டும் போதில் உடனே மழை பெற்றதற்கு இணை' என்பது இது. உறையாவது மழை; உறைவுக்கு நிலைக் களமாக இருப்பது.

முறை செய்தலே காவல்; அதனைச் செய்பவனே காவலன்; அவனே அழியா வாழ்வுடைய மன்னன்; அவனே கண்கண்ட இறைவன்; இவை முயன்று உண்டாக்க வேண்டுவன அல்ல; இயற்கையாய் அமைவன. ஆள்பவன் ஆள்கிறவன், ஆள்வான் என்பன நிகழ்கால, எதிர்காலச் சுட்டுகள், இச்சுட்டுகள் இறந்த காலத்தில் என்னாம்? ஆண்டவன் அன்றோ!