உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. அறிதோற்றியாமை

இனிய தலைவன்; இனிய தலைவி; ஓருயிரை ஈருடலில் பகுத்து வைத்தாற் போன்ற இயல்பர்; அல்லது இருதலை ஒரு புறாப் போன்ற இன்ப அன்பின் நிலைக்களமானவர்.

அவனுக்காக அவள்; அவளுக்காக அவன் - எனப் பிறந்து, அப்பிறவி நோக்கைப் புரிந்து, அந் நோக்கை நிறைவிப்பான் போன்ற நேயத்தார்.

66

கூடு விட்டுக் கூடு பாய்தல் என்பது இதுவே காண்!" என்பார் போல அவனுள் அவளும், அவளுள் அவனும் மாறிப் புகுந்து மாறா அன்பில் விளங்குபவர்.

அவர்கள் ஒருவரை ஒருவர் காணலில் இன்பம்; சொற் கேட்டலில் இன்பம்; முகர்தலில் இன்பம். தழுவலில் இன்பம்; துய்த்தலில் இன்பம்; இவற்றினும் மேலாக நினைதோறும் உண்டாகும் நிகரிலா இன்பம்!

-

நேற்றுப் படித்த இன்பக் குறளை இன்று படித்தால் புதுப்பொருள் இன்பம் புதுச் சுவை இன்பம். அதற்கு முன் அடைந்திராமல் அப்பொழுது அடையும் இன்பம் அடுத்த நாள் பயிலுங்கால் அப்படியே புதுப்புது இன்பம். எனத் தொடரும் தொடராய் வளரும் இன்பம் போல, அவனும் அவளும் தம்முள் 'காணும் இன்பம் ஒவ்வொருவரும் பாவாகவும், பாவின் சுவையாகவும் மாறி மாறித் தோன்றும் இன்பம்! இவ்வின்பம் இணையற்றதுதான்; இதற்கு இணை காணல் அரிதுதான்' எனினும், இணையில்லாமல் போகிவிடவில்லை.

பழுத்த அறிவாலும் பயில எண்ணிய உளவியல் தேர்ச்சி யாலும், படைப்பின் நோக்கும் அதனை நிறைவிக்கும் நோக்கும் ஒருங்குணர்ந்த மெய்ப்பொருள் திறத்தாலும், தனிப்பெருஞ் சிறப்புடைய தவப்பெரு மூதறிஞர் வள்ளுவனார், இணையைக் கண்டு இனிதின் இணைத்தார். அதனை அறத்துப்பாலில் வைத்தல் இல்லாமல், இன்பத்துப் பாலில் வைத்தார்.