உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

-

இளங்குமரனார் தமிழ்வளம் 40 ஓ

"நீங்கள் அறியாத பொருளென ஒன்றில்லை. உங்களைப் போலும் சிந்தனையாளர் ஒருவர் இதுகாறும் பிறந்ததில்லை” என்று புத்தர் பெருமானிடம் அவர்தம் மாணவர் ஒருவர் கூறினார்.

அதனைக் கேட்ட பேரறிவுப் பிழம்பு கையமர்த்தி, “எவ்வளவு பெருமிதமான சொற்களைச் சொல்கிறாய்; நீ, எனக்கு முன்னே ருந்த புத்தர்களை அறிவாயா? எனக்குப் பின்னே தோன்றி வரும் புத்தர்களை அறிவாயா? என்னையேனும் முழுமையாக அறிவாயா? இருந்தும், இத்தகைய செருக்குடன் உரைக்கின்றாயே என்றார். அடுத்திருந்த 'சின்சுபா' என்னும் மரத்தில் இருந்து ஓரிலைப் பறித்தார் புத்தர்.

"இதோ பார்! என் கையில் இருப்பது ஒரே ஓர் இலை. ஆனால், இம் மரத்திலுள்ள இலைகள் எத்தனை? உலகில் உள்ள மரங்களில் உள்ள இலைகள் எத்தனை? இந்த ஓர் இலையளவு தான் என்னிடத்துள்ள அறிவு! உலக அறிவோ அத்தனை மரங்களின் அத்தனை இலைகளின் அளவு விரிந்தது.” என்றார்.

""

"கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலக அளவு என்பது இதன் மற்றொரு வாய்பாடு தானே. அறிதோறும் அறியாமை கண்டு அறியத்துடித்த அறிவர் உரை அது!

ஏறத்தாழ 10 ஆண்டுகள் சிறையில் இருந்தவர் நேரு பெருமகனார். அவர் சிறையில் இருந்த காலமெல்லாம் படிப்பிலே செலவிட்டார். எழுதுவதிலும் செலவிட்டார். அங்கிருந்த போதுதான் சொன்னார்; “நான் இதுவரை எவ்வளவு நூல்களைப் படியாமல் இருந்திருக்கிறேன்; எவ்வளவு செய்தி களைத் தெரியாமல் இருந்திருக்கிறேன் என்பதைத் தெரிய முடிந்தது" என்பது அது. அறிவு வேட்கையில் அலமந்த அவர் அறியாமை உணர்ந்த வகை அது.

எவரும், அறிதோறும் அறியாமை கண்ட பயன் என்ன? அறியாமை காணக் காண, அறிந்த இன்பம் பெருகும்! அந்த இன்பம் தன்னை மறந்த இன்பம்! தானே அறிவாய இன்பம்! வீடு பேற்றிலே இருக்கும் விழுமிய இன்பம்! உலகியலில் காணும் இயற்கை இன்பத்தால், துறவோம் அடைகின்ற தூய இன்பத்திற்குப் பாலமிட்ட வள்ளுவ இன்பம் இது! உலகப்பொது இன்பத்தை உலகப் பெருநாவலர் உரைத்தார். உலகோர்க்கு நாம் உரைத்தோமா? உரைப்போமா?