உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவமும் வாழ்வியலும்

77

"யான் விரைந்து செல்ல வேண்டும் தான்; தேரும் ஓடவேண்டும் தான்; அதற்காக அதன் மணி ஒலி கேட்டுக் கீரியும், வண்டும் என்ன ஓட்டம் ஓடுகின்றன பார்த்தாயா? பாகனே! தேரின் மணியின் நாவை ஆடாமல் கட்டிவைத்து ஓட்டு” என்று ஆணையிடுகிறான் அகப்பாட்டுத் தலைவன் ஒருவன்.

இன்ன பண்பாட்டுக்காட்சிகள் நம்பண்டை இலக்கியப் பேழையுள் ஒன்றா இரண்டா? பண்பாட்டு வைப்பகம் பழந் தமிழ்ப் பாடல்கள் அல்லவோ!

நாகரிக வளர்ச்சியில் வீடு அமைத்தானே தமிழன்; திண்ணை அமைக்க, அதில் திண்டு அமைக்க, அதில் மாடம் அமைத்து விளக்கிடத் தவறியது உண்டா? ஓரக்குடித்தனம் எனினும் ஒட்டுத்திண்ணை இல்லா வீடு எடுத்தானா அவன்?

ஊரை அமைத்தால் அம்பலம் மன்றம் தெற்றி நத்தம் புல்வெளி புறம்போக்கு என்பன இல்லாமல் அமைத்தானா? ஊர் மன்றத்தைப் பொதுமையாக்கிப் பொதியில் என்று பெயரும் சூட்டினானே!

சாலை எல்லாம் சோலையும் காவும் துரவும் அமைத்தது பண்பாட்டின் சான்றுகள் அல்லவோ.ஆங்கு நிற்கும் சுமை தாங்கிகளும் துலக்கிணறுகளும் தண்ணீர்ப் பந்தல்களும் சத்திரம் சாவடிகளும் சாற்றுவன எவை எவை? பண்பாட்டு முழக்கங்கள் தாமே!

ஆவுறிஞ்சு குற்றி அமைத்ததும் திருக்கோயிலில் மருத்துவ மனை அமைத்ததும் பண்பாட்டு விளக்கங்கள் அல்லவோ! காதலாகட்டும் கற்பு ஆகட்டும் பொருளியலிலா நின்றன? கணியத்தையா நம்பிக்கிடந்தன? பண்பின் பொருத்தங்கள் தாமே தொல்காப்பியர் காட்டியன;

பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு உருவு நிறுத்த காம வாயில்

நிறையே அருளே உணர்வொடு திருவென முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே

என்பது, பண்பாட்டு வாழ்வே வாழ்வு எனக் காட்டியது ல்லையா?

கொண்ட கொழுநன் குடிவறன் உற்றது எனக் கொடுத்த தந்தை கொழுஞ்சோற்றை நினையாதவள் இலக்கியமாகிறாளே.