உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறநானூற்றுக் கதைகள்

127

ஊருக்கு ஓடினான். வில்லும் அம்பும் எடுத்தான். ஊர்க் காரரை யும் உரக்கக் கூவி அழைத்தான். “பசுக்கள் பகைவரால் திரட்டப் படுகின்றன. பழிவராமல் காப்பதற்குப் புறப்படுங்கள். சிங்கங்கள் வாழும் இடத்திலே சிறுநரி எக்காளமிட விட்டு விடாதீர்கள் என்று அறைகூவல் விடுத்தான். பெருகித் திரண்டனர் வீரர். ஒருவரை முந்தி ஒருவர் படைக் கருவிகளுடன் புறப்பட்டனர்.

வரிப்புலி பசுவைத் திருப்பப்போகும் அடையாளமாக ஒரு மாலையை அணிந்தான். தன் வெற்றிக்கு அடையாளமாக மங்கை கழுத்திலும் ஒரு மாலையை அணிவித்தான். அப் பொழுது தன்னுடைய கழுத்து மாலையை எடுத்து வரிப் புலியின் கழுத்திலே போட்டு “வெற்றியொடு மீள்க” என்று வாழ்த்தினாள். வரிப்புலி தன் கழுத்து மாலையை எடுத்து அவள் கழுத்திலே போட்டு "மானவீரம் நம்குடிப் பொருள்” என்று விடைபெற்றுக்கொண்டு சென்றான்.

வந்த வீரர்களையெல்லாம் வழிகாட்டி அனுப்பிவிட்டு, மன்னன் உறையும் அரண்மனைக்குச் சென்றான் வரிப்புலி. அங்கிருந்தும் படை திரண்டது. வரிப்புலியை முன்னமே அறிந் திருந்த மன்னன் மார்போடு தழுவிக்கொண்டு “வேங்கை மறவன் மருக, வெற்றியொடு வருக!” உன் வெற்றிக்கும் நம் அன்புக்கும் இதோ... என்று தன் பொன்மாலையைக் கழற்றி வரிப் புலிக்கு அணிவித்து, அவன் பொன்மாலையை எடுத்துத் தான் அணிந்து கொண்டான். மன்னவன் தழுவி, அன்பு காட்டியபின் வரிப்புலி இரட்டைப் பங்கு வீரம் பெற்றான். விரைந்து சென்று, பசுவை மீட்குமாறு செல்லும் படைக்கு முன்னின்றான்.

பெரியபாறை ஒன்றின் மேல் ஏறிக்கொண்டு பார்த்தான் வரிப்புலி. பகைவர்கள் பசுக்களை விரைந்து திரட்டிச் சென்றனர். தன்னொடும் வந்த வீரர்களை இரு பிரிவாக்கி, இருபக்கங் களிலும் வளைக்குமாறு ஏவினான். பின் வருவது பற்றிக் கவலைப் படாத அவ்வீரர்கள் செறிந்த காட்டினுள் நுழைந்து நுழைந்து சென்று திடுமெனப் பகைவர் முன் வெளிக்கிளம்பினர். உயர்ந்த பாறைமேல் நின்று கொண்டு அம்பு மழை பொழிந்தனர். இவ்வாறு ஏற்படும் என்று எண்ணாமல் நடந்து கொண்டிருந்த பகைவர்கள் பசுக்களை ஓடாமல் காத்துக்கொள்ளுமாறு சிலரை வைத்து விட்டு எதிர்த்துப் போர் தொடுத்தனர். மின்னல் வெட்டுப் போலவும், மீன் பிறழ்வு போலவும் அம்புகள் பாய்ந்தன. சிலபேர் தொகுத்துவிட்ட அம்புகள் கூட்டமாகத் தொகுத்துச் செல்லும் பறவைகளைப் போல் காட்சியளித்தன.