உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324

புலவர் ஊதியம்

இளங்குமரனார் தமிழ்வளம் 5

புலவர்கள் கல்வித் தொண்டினை அன்று செய்திருக்கா விட்டால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதான தமிழகம் இன்றும் நாகரிகத்தில் பழைய கற்கால நிலையிலேதான் இருந் திருக்கக்கூடும்; இதற்கு யாதோர் ஐயமும் இல்லை. அன்றி, இக்காலம் கல்விப் பணி புரிபவர்க்கு அரசினர் திங்கள் தோறும் குறிப்பிட்ட ஊதியம் தந்து உதவுகின்றனர். ஏற்படும் நிர்வாகச் செலவினையும் ஏற்றுக் கொள்கின்றனர். கட்டடங்களையும் தளவாடப் பொருள்களையும் தந்துதவுகின்றனர். ஆனால் அந்நாளில் ஆசான் இல்லமே பள்ளி; அவனே அனைத்தும்! இதுவுமல்லாமல் பயிலவரும் மாணவர்களுக்கு அம்மையாய், அப்பனாய் அமைந்த அவனே உணவு உடைச் செலவினையும் ஏற்றுக் கொண்டு உறையுளையும் தந்துதவ வேண்டியவனாகவும் இருந்தான்! இதற்கு அரசர் தரும் பரிசுப் பொருளும் ஊரார் உதவும் சிற்றுதவியும் தாமே ஆசிரியன் ஊதியம்? அவற்றையும் பெறாமல் என்னே செய்ய இயலும்?

உயரிய புலவர்கள்

புலவர்களும் பொருள் தருவோரைப் புகழ்ந்து கூறுவது ஒன்றைமட்டுமோ தம் தொழிலாகக் கொண்டிருந்தனர்? முகங் கோணிக் குன்றத்தளவு கொடுப்பினும் கொள்ளேம்; உவந்து குன்றியளவு கொடுப்பினும் மகிழ்வொடு கொள்வேம்! என்றும், முடியுடை மூவராயினும் முறைமை தவறிக் கொடுப்பராயின் ஏற்றுக் கொள்ளேம் என்றும் வாழ்ந்த புலவர்களிடம் புகழ்வதே தொழிலாக இருந்தது எனின் தவறேயாம். புலவர்கள் எத்தகைய அரிய தொண்டுகள் செய்துள்ளனர்! போர் நிகழா வண்ணம் காத்த புலவர்கள் எத்துணையர்? அறநெறி தவறிய வேந்தனுக்கு அறமுரைத்த புலவர்கள் எத்துணையர்? மக்கள் எண்ணத்தை மன்னனிடம் எடுத்துரைத்த புலவர்கள் எத்துணையர்? நாடு நல முற நல்ல பல திட்டங்கள் தந்துதவிய புலவர்கள் எத்துணையர்? மக்களொடு மாறுபட்டவரை, மனைவியொடு மாறுபட்டவரை, உடன் பிறந்தவரொடு மாறுபட்டவரை ஒன்றுபடுத்திய புலவர்கள் எத்துணையர்? ஆராயாச் செயலில் செல்லும் வேந்தனை அடுத்த நல்லுரைகளால் திருத்திய புலவர்கள் எத்துணையர்? புறங்காட்டி ஓடிவந்து கோழையாய் மதிலினுள் மறைந்திருந்த மன்னர்களுக்கு வீரவுரை கூறிய புலவர்கள் எத்துணையர்?