உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

இளங்குமரனார் தமிழ்வளம் 5

ப மான் அறிந்தான். படை எடுப்பை நிறுத்திக் கொண்டான். நல்வழிப்பட்ட காஞ்சி வேந்தனைப் பல வழிகளாலும் பாராட்டி விட்டு ஒளவையார் தகடூர் வந்தடைந்தார். முதுபெருங் கிழவி யான ஔவை பாட்டு மட்டுமா பாடித்திரிந்தாள்? அரிய அமைச்சராலும் ஆற்றமுடியாத செயலை ஆற்றி முடித்த அவர் அரசியல் திறம்தான் என்னே! அவர் போலும் தூதரைக் காண்பதும் எளிதில் கூடுவதோ!

இட

அதியமான் காலத்தில் கோவலூரைத் தலை நகரமாகக் கொண்டு முள்ளூர் நாட்டை மலையமான் திருமுடிக்காரி ஆட்சிபுரிந்து வந்தான். அவனது வீரப்புகழ் போய்ப் புகாத மில்லை. மூவேந்தருமே அவன் முற்றத்து நின்று தத்தமக்குப் போர்த்துணைப் புரிந்துதவுமாறு அழைக்கும் சிறப்புடன் விளங்கினான். இச்சிறப்பால் அவன் அளவுக்குமிஞ்சிய பெரு மிதம் கொண்டு தருக்கியிருந்தான். அதனைக் கேள்வியுற்ற அதியன் சினங்கொண்டான். காரியை அடக்கி ஒடுக்க வேண்டு மென்று கருதினான். படை கொண்டு கோவலூரை முற்றுகை யிட்டான்.

காரியும், அதியமானும் ஒருவருக்கொருவர் இளைக்காத வீரர்கள் ஆவர். இருவரும் சிங்கமும் சிங்கமும் தாக்குவதுபோல் தாக்கினர். படைகளின் அழிபாடோ சொல்லும் தரத்ததாய் இல்லை. களத்தின் கொடுமைக் காட்சி ஒளவையாரைத் துன் புறுத்தியது. போரை ஒழிக்குமாறு முயன்றார். காரியையும், அவன் படை வீரர்களையும் நெருங்கி, “வீரர்களே அதியனை எதிர்க்கவோ முனைந்தீர்! அவன் படை என்ன அவ்வளவு எளியதா? உங்களுக்கு நாடு நகர் வேண்டுமா? வீடுவளம் வேண்டுமா? அப்படியானால் இப்பொழுதே ஒன்றைச் செய்யுங்கள்! படைக் கருவிகளை வீசி யெறிந்துவிட்டு வீரன் அதியமானை அடைக்கலம் புகுங்கள்! அது ஒன்றே நீங்கள் பிழைக்க வழி! இன்றேல் சிறிது நேரத்தில் உங்கள் மனைவியர் அனைவரும் தங்கள் மங்கல நாணை இழக்க வேண்டி நேரிடும் ஐயமில்லை என்றார்.

ஆனால் ஒளவையார் சொல்லக் காரியோ அவன் வீரர்களோ கேட்கவில்லை. அதியனும் போரை விடவில்லை கடும் தாக்குதல் புரிந்தான். காரி படையுடன் ஓட்டம் பிடித்தான். வெற்றி முழக்கம் செய்துவிட்டு வீரர்களுடன் தகடூர் நோக்கி விரைந்தான் அதியமான்.