பண்டைத் தமிழ் மன்றங்கள்
417
பெறுதற்காகவும், பார்த்துச் செல்வதற்காகவும், பண்புற்ற பழக்கத்திற்காகவும் வந்த அவர்கள் நல்லூரை நோக்கி நடை யிட்டார்கள். நால்வர் சென்ற வழி அதிலும் அறிவும் பண்பாடும் முதிர்ந்த நால்வர் சென்ற வழி - நல்வழியாகத் தானே இருக்க முடியும். அந்த நால்வர் எவர்? கபிலர், பரணர், அரிசில் கிழார், பெருங்குன்றூர் கிழார் என்பவர்கள் ஆவர்.
சொல்லும் சொல்
எளிய ஒருவனை இடித்துக் கேட்பதற்காகப் புலவர்கள் செல்லவில்லை. வலிய ஒருவனை வயப்படுத்துவதற்காக வழிப்படுத்துவதற்காகச் செல்கின்றார்கள். அவர்கள் “நாநலம்’ வாய்ந்தவர்கள்; தம்முடைய தகுதியையும் கேட்பவர் தகுதியையும் அறிந்து பேசவல்லவர்கள். ஆகவே சொல்ல வேண்டியதை முறைப்படி சொல்வார்கள். அவர்கள் சொல்லும் சொல், வெல்லும் சொல்லாக இருக்கும். நா என்னும் கலப்பையால் அறிவு நிலத்தை உழுது தேர்ந்த புலமை உழவர்கள் அல்லவா அவர்கள்!
கபிலர் கருத்துரை
“வள்ளல் பேக! வளநாட! உன்னையும் உன்மலையையும் யாம் பாடினோம்; அதனைக் கேட்டுக் குழல் வருந்தி ஒலிப்பது போல் புலம்பி ஓயாது அழுதாள் ஒருத்தி; அவள் யாவள்? நீ அறிவாயோ?” என்று அறியாத ஒருத்தியைச் சுட்டிக் காட்டி வினாவுவதுபோல் வினாவினார் வாய்மொழிக் கபிலர்.
பரணர் பாங்குரை
"வேந்தரே! நாங்கள் நும் கானகத்தை இனிக்கப் பாடி னோம்; அதனைக் கேட்டுக் கண்ணீர் சொரிந்தாள் ஒரு காரிகை. 'அம்மே! நீ எம் தலைவனாம் பேகனுக்கு உரிமை உடையவளோ' எனக் கேட்டோம். அவள் 'யான் உரிமை உடையவள் அல்லள்! அவன் நல்லூரில் இருக்கும் நங்கை ஒருத்தியின் நலம் நுகர்ந்து வருகின்றான் என்று கேள்வியுற்றேன்' என்றாள். உன்னையே நினைந்து இருக்கும் அவளுக்கு அருள் செய்யாது இருப்பது கொடிது” என்றார் கபிலரின் நண்பர் பரணர். பேகன் நெஞ்சத் தில் நன்றாகத் தைத்தது! பேச்சு எதுவும் ஓடவில்லை பேகனுக்கு! பரணர் மேலும் தொடுத்தார்.
"மயில் நடுங்கு மென்று மனம் இரங்கித் தான் மழையில் நனைவதையும் பொருட்டாக எண்ணாமல் போர்வை வழங்கிய மன்னவ! அருளாள! யான் பசி கொண்டு இங்கு வந்தேன்