உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

திருக்குறள் ஆராய்ச்சி 1

161

துறவு நிலை கொண்டார் மனத்தளவானும் பிறர் பொருளைக் கவர நினைத்தல் ஆகாதாம்.

அதனை,

"உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்

கள்ளத்தால் கள்வேம் எனல்

என்பார் (282)

இல்லறத்தாரின் பண்புகளுள் ஒன்றாகச் சொல்லப்படுவது வெஃகாமை (பிறர் பொருளை விரும்பாமை) அவ்வாறாக அவ்வில்லறத்தில் மேம்பட்ட துறவர், பிறர் பொருளைக் கவர நினைத்தலும் பெரும்பிழையாகும் என்பது தெளிவு.

நல்லோர் போர்வையில் அல்லோர் புகுந்து விடுவதும் உலகியற்கை என்பதைத் தெளிவாகக் கண்டவர் வள்ளுவர். ஆதலின் அத்தகையரிடத்து விழிப்பாக இருத்தல் வேண்டும் என்பதை அறிவுறுத்தவே இக்கூடா ஒழுக்கம் கள்ளாமைகளைத் துறவில் வைத்தார் என்க.

களவு என்பதைக் காரறிவாண்மை என்று சுட்டுகிறார் (287)! னெனில் களவு செய்யக் கருதுவார் அறிவிலரா? எவ்வளவு கூர்த்த அறிவினராகக் களவு செய்வார் உளர்! “கள்வார் பெரிதா, காப்பார் பெரிதா!” என்பது பழமொழி.

களவு செய்வானுக்கும் அறிவு உண்டு; அதனைக் காக்க முனைவானையும் வஞ்சித்துக் கவரும் செயல் திறமும் உண்டு அதனால், அவ்வறிவை அறிவெனல் ஆகாது. அறிவு என்றால் நல்வழியில் செல்லுதல் வேண்டும். அல்வழியைத் தவிர்த்தல் வேண்டும். ஆதலால் களவை விரும்பும் அறிவு ‘காரறிவு’ என்றார். கறை படிந்த அறிவு என்பது பொருளாகும்.

ஒற்று அறியச் செல்வார் ‘துறவியர் கோலத்தில் செல்லு தலும் உண்டு' என்பார் வள்ளுவர் (576). அது நாட்டு நலம் கருதிய செயலாக அரசியலில் கொள்ளப்படும். ஆனால் பிறர் நலம் நாடும் துறவு கொண்டவன் அத்துறவுள் வஞ்சத்தை வைத்துக் களவாடக் கருதுவனாயின் அது வேலியே பயிரை மேய்ந்தது ஆகிவிடுமே! ஆதலால், அத்துறவு நலம் காக்கவும், மக்கள் நலம் காக்கவும் கள்ளாமையை வலியுறுத்தினார்! துறவோர்க்குரிய நல்ல பண்புகளுள் ஒன்று வாய்மை. அதனால், அடுத்துக் கூறுகிறார் அதனை,