2
―
இளங்குமரனார் தமிழ்வளம் 6
நன்மை எவ்வளவு? இரைட்டு உடன் பிறந்தாரும், எடிசனாரும், நியூட்டனாரும் பிறந்தமையால் உலகம் கொள்ளும் பயன்கள் எத்தனை? அவர்கள் பிறந்த குடும்ப அளவிலோ நன்மை நின்றது? அறிவறிந்த மக்கள், பண்பமைந்த சான்றோர், பிறர்க் கென வாழும் பெருந்தகையர் பிறந்த குடியினும் இப்பேருலகம் அடைந்து வரும் நன்மையை எண்ணியே, 'உலகுக்கு வாழும் உயர்ந்தோர்கள் இருப்பதால்தான் ‘உலகம் அழியாமல் நிலை பெற்று வருகிறது' என்றார் திருவள்ளுவர். (996).
மனவளம்
கல்வி என்பது ‘மூளை வளம்' மட்டும் அன்று; நெஞ்ச வளம் அல்லது ‘மனவளம்' இல்லாத மூளைவளக் கல்வி, அழிவுக்குப் பயன்படுமேயன்றி, ஆக்கத்திற்குப் பயன்படாது. அதனால், மூளையும் நெஞ்சும் ஒருங்கே வளம் பெறச் செய்யும் கல்வியறிவே அறிவு எனக் கண்டார் வள்ளுவர். 'நெஞ்ச வளம் இல்லாத மூளைவளக் கல்வியால் என்ன பயன்? அது கல்வியே அன்று' என்று வருந்தினார். (315).
முறை கேடு
வள்ளுவர் கண்ட மனவளக் கல்வி பற்றி அறிஞர்களும், ஆட்சியாளர்களும், பெற்றோர்களும் சிந்திக்காமல், 'மூளைக் கல்வி தருவதே முறையான கல்வி' என்று கொண்டு விட்டமையால் நாடு நாடாக இல்லை! உலகு உலகாக இல்லை! கற்றவர் நடத்தைக்கும் கல்லாதவர் நடத்தைக்கும், கற்றவர் செய்கைக்கும் கல்லாதவர் செய்கைக்கும் வேறுபாடு இல்லாததுடன், ‘கல்லார் மிக நல்லர்' என்று கருதும்படியான நிலையும் உள்ளது. அத னால் வள்ளுவர் வழியில் 'நல்ல மாணவராக' விளங்க விரும்பு வார்க்கு இச்சுருக்கக் குறிப்பு நூல் வரையப்படுகின்றது.
கல்வியின் சிறப்பை வலியுறுத்த விரும்பும் வள்ளுவர், கல்லாமையின் குறைகளையும், தீமைகளையும் நன்றாக விளக்கு கிறார். அவற்றை அறிந்தாவது அறிவைப் பெற்றுக் கொள்ள வேண்டுமே என்பது அவர்தம் ஆவல்.
புலமை
அறிவு நுண்ணியது; விரிந்தது; ஆழமானது; அதனை அடைவதற்காக அருமையான ஐம்புலன்கள் நமக்கு அமைந் துள்ளன. அப்புலன்களைக் கொண்டு புலமை பெறாதவன்(ள்) எத்தகைய அழகிய தோற்றமுடையவன்(ள்) ஆனால் என்ன?