உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெயர்

2. நல்ல ஆசிரியராக

ஆசிரியர், ஆசான், கணக்காயர், குரு, ஈகையர், கொடைஞர், ஓதுநர், பார்ப்பார், புலவர் என்பனவெல்லாம் ஆசிரியரைக் குறிக்கும் அருமைச் சொற்கள்.

குற்றமில்லாமை, நூல்தேர்ச்சி, செம்மை, உள்ளொளி, கொடைநலம், பயிற்றல், ஆய்தல், புலமைச்சீர் என்னும் சிறப் பியல்களால் பெற்ற பெயர்கள் இவை. அனைத்தும் தனித்தமிழ்ச் சொற்களே.

பொருள் விரி

வீட்டுக்கும் நாட்டுக்கும் உலகுக்கும், ஒளியுண்டாக்கும் களியுண்டாக்கும் - உயர்வுண்டாக்கும், பெரும் பொறுப்புடையார் ஆசிரியப் பெருமக்களேயாவர்.

ஆசிரியர் என்பார் ஏட்டுக்கல்வி கற்பிப்பார் மட்டுமல்லர். ‘ஏட்டுக்கல்வி கற்பிப்பாரே ஆசிரியர்' என்ற அளவில் பொருட் சுருக்கம் அமைந்தமையே, ஆசிரியரின் பணிச்சுருக்கமும் புகழ்ச் சுருக்கமும் ஆயிற்றாம்.

ஆசிரியர் என்பார் எக்கலைக்குரியர் என்பது இல்லை. மருத்துவர், ஆசிரியர்; சிற்பர் ஆசிரியர்; கொல்லர், கொத்தர், தச்சர், தட்டர் ஆகியோரெல்லாம் ஆசிரியர்; ஓவியர்; வண்ணக் கர், ஒப்பனையர், துன்னர் (தையற்காரர்), சிலம்பர், மல்லர் இன்னரெல்லாரும் ஆசிரியர். பயன் கலை ஆயினும் கவின் கலையாயினும் தாம் கற்றதைப் பிறருக்கும் கற்பிப்பார் எவரோ அவரெல்லாரும் ஆசிரியர்.

நூலியற்றுவார், உரைகாண்பார், பதிப்பிப்பார், இதழ் நடத்துவார், பொறி இயக்கம் கற்பிப்பார் இன்னர் ஆசிரியர் அல்லரோ!

நட்டுவர் என்பார், இசைஞர் என்பார், யாழர் குழலர் முழவர் தண்ணுமையர் என்பார் இன்னவரும் ஆசிரியர் தாமே!