―
திருக்குறள் ஆராய்ச்சி 1
25
வள்ளுவர் காலநிலையும் வள்ளுவர் கருத்தும் ஆழ நினைவார் ஒரு தெளிந்த முடிவுக்கு வரலாம். அம்முடிவு இன்றும் ஒரு நல்லரசால் பேணத் தக்கது என்னும் மேன் முடிவுக்கும் வரலாம்.
குடிபடை
வள்ளுவர் காலத்திலும் சரி, பிற்பட்ட ஆங்கிலர் ஆட்சிக் காலம் வரையிலும் கூடச் சரி, குடிகள் அனைவரும் படைஞராகவும், படைஞர் அனைவரும் அனைவரும் குடிகளாகவும் இருந்தனர். போர் என்றவுடன் எத்தொழில் செய்நரும் தம் தொழிலை விடுத்துப் போர்த் தொழில் மேல் போன வரலாறு தெளிவாக அறிந்தது. அதனால் ‘குடிபடை' என்னும் வழக்காறே இருந்தது.
குடிகள் அனைவரும் படைஞர் என்பதும், படைஞர் அனைவரும் குடிகள் என்பதும் குறிப்பது அது. வள்ளுவர் பொருட்பால் முதலதிகாரமாகிய இறைமாட்சியின் முதற் பாடலில் ‘படைகுடி’ என்று தொடங்கிய முறைமை எண்ணின், உண்மை புலனாம்.
இப்படைகுடி போலவே அந்நாளில் கற்றார் அனைவரும் கற்பிக்கும் கடமையையும் மேற்கொண்டிருந்தனர். வேறு வேறு தொழில்களில் ஈடுபட்டிருந்தாலும் கற்றவர் தம் கடமைகளுள் ஒன்றாகக் கற்பித்தல் கடமையையும் மேற்கொண்டிருந்தனர். ஆதலால், கற்றோரைப் பற்றிக் கூறிய வள்ளுவர் கற்பிப்போர் எனத் தனிப்படுத்திக் கூறினார் அல்லர்!
வள்ளுவர் வழியிலேயே கற்போர் அனைவரும் கற்பிக்கும் கடப்பாட்டாளராகவும் இருந்திருந்தால், இம் மண்ணில் ‘கல்லார்' எவரும் இல்லார் என்னும் நிலை கட்டாயம் நெடுங் காலத்திற்கு முன்னரே இருந்திருக்கும்.
வள்ளுவக் கல்வி
வளர்ந்தோர் கல்வி, முதியோர் கல்வி, இரவுக்கல்வி, மாலை நேரக் கல்வி முறைசாராக்கல்வி, என்றெல்லாம் முழுமை பெற முடியா இடர் இருந்திராது. வள்ளுவர்க்குப் பின்னே "இவரிவரே கற்றற்குரியர் இவரிவரே கற்பித்தற்குரியர்” என்னும் பிறப்பொவ்வாக் குலக்கருத்துகள் குடிபுகுந்து கலைப் பொருளை நிலை குலைத்து விட்டன. அக் குனி நிலை நிமிரவே எத்தனையோ பாடுகள்பட வேண்டியுள்ளன.