உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

திருக்குறள் ஆராய்ச்சி 1

அறிதோறும் அறியாமை

33

ஆராய்ந்த கல்வி உண்டாக உண்டாகத்தான், அதுவரை அறியாதிருந்தவை புலப்படும்; அறிய வேண்டியவை மலையென உயர்ந்தும் கடல் அலையெனப் பெருகியும் இருப்பது புலப்படும். கற்றது கைம்மண் அளவு; கல்லாதது உலக அளவு என்பதை அறியச் செய்யும். இதனையே வள்ளுவம்,

அறிதோறு அறியாமை கண்டற்றால்’

என்கிறது.

6

(1110)

மூவாயிரம் நாள்களுக்கு மேலாகச் சிறையில் இருந்த நேரு அப்பொழுது படித்த படிப்பால் “இதுவரை படித்தறியாத நூல்கள் எவை, எவை என்பதைப் படிக்கப், படிக்கவே அறிந்து கொண்டேன்” என்றார்.

L

ஒழுக்கம்

படித்தவை மறத்தல் இயற்கை; மீள மீளப் படித்தல், பயன்படுத்தல், நினைவுறுதல் என்பவற்றால் மறவாமை உண் டாகும். அதனால், ‘ஓதுவது ஒழியேல்' என்றும், ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டா’ என்றும், 'நூறுநாள் ஓதி ஆறு நாள் விடத்தீரும்' என்றும், 'பாடம் ஏறினும் ஏடது கைவிடேல்’ என்றும் ‘சாவாமல் கற்பதே கல்வி' என்றும் தம்முன்னோர் கூறினர். திருவள்ளுவரோ “சாந்துணையும் கல்லாத வாறு என்?” என ஏவினார்.

“கற்றவற்றை மறந்தாலும் கூட மீளவும் பெற்றுக் கொள்ளலாம். ஆனால், கற்பிப்பவன் தன் ஒழுக்கம் தவறுதல் கூடாது. தவறினால், அத் தவற்றை மாற்றுதற்கு இயலாது. பெருங் கறையாகவே இருந்து விடும்” என்றும் எச்சரித்தார் (134). இவற்றால் அறிவொடு கூடிய பண்பாளர்களே ஆசிரியத் தொழிலுக்குத் தக்கார்’ என வள்ளுவர் உள்ளம் குறித்தது என்க.

அரம், மரம்

தன் கூர்மையால் வாளினையும் கூர்மையாக்குவது அரம். அவ்வரம் போலத் தாமும் கூரிய அறிவினராய், பிறரையும் கூரிய அறிவினர் ஆக்கவல்லராய் இருப்பார் உளர். அத்தகையரிடத்தும் மக்களுக்கு வேண்டிய நற்பண்புகள் இல்லை எனின், அவர்கள் வாளால் அறுபடும் மரம் போன்றவரே அன்றி அரம் போன்றவர் ஆகார் என்று கடிந்துரைத்துத் கடனாற்றினார் திருவள்ளுவர் (997).