14. வகுத்தலும் தொகுத்தலும்
‘முதலாளி' என்றால் ஆண்மறை நாட்டு வட்டாரத்தில் முத்தப்பர் ஒருவரைத்தான் குறிக்கும். முத்தப்பர் பெருஞ் செல்வர்; எப்பக்கம் நோக்கினாலும் முத்தப்பருடைய நன் செய், புன்செய், தோட்டம் துரவுகளே காணப்பெறும். வேறொருவருக்கு உரியனவாக அவை காணப்பெற மாட்டா. முத்தப்பர் பரம்பரையினர் இன்று நேற்றைச் செல்வர்கள் அல்லர். பத்துப் பதினைந்து தலைமுறைகளாகவே பணக்கார ராக இருந்த பெருமை அவர்கட்கு உண்டு.
66
குணக்குன்றம் என்றால் முத்தப்பருக்குத் தான் தகும்” என்று சில குழந்தைகள் முதல் அனைவரும் கூறுவர். அவரைப் பற்றியும் அவர் கொடைச்சிறப்பு, குணமேம்பாடு பற்றியும் பாட்டிகளும் தாத்தாக்களும் தங்கள் பேரன் பேத்திகளுக்குக் கதை கதையாகக் கூறுவர். இன்னும் கூறுவானேன்; ஆண்மறை நாட்டில் ஒரு புலவர் மட்டும் இருந்திருந்தால் ஒரு புராணமே பாடியிருப்பார். அப்படிப் பாடியிருந்தாலும் கற்பனையாக அவர் பாட வேண்டியது இல்லை. உண்மையை உண்மையாகக் கூறினாலே போதும்! அவர் செயலிலே அவ்வளவு சிறப்பு உண்டு.
முத்தப்பர் செல்வச் செருக்கு அணுவளவும் இல்லாதவர். அவர் உடல் சட்டை கண்டு அறியாது. மழையோ வெயிலோ அவரைத் துன்புறுத்தி அறியா. காலிலே செருப்போ கையிலே குடையோ இல்லாமல் பகற் பொழுதெல்லாம் காட்டிலும் கரையிலும் சுற்றியலைவார். எங்கு நிழல் கண்டாலும் படுத்து விடுவார். பிறகு எத்தனையோ மணி நேரம் ஓடித்தான் இந்த உலகத்தை ஏறிட்டுப் பார்ப்பார். அவ்வளவு உறக்க சீலர்.
வீட்டிலே முத்தப்பர் இருந்தால் போதும்; குழந்தைகள் பாடு கொண்டாட்டம் தான். ஒன்று தோளிலே ஏறும்; மற்றொன்று மடியிலே குந்தும்; வேறொன்று தொந்தியிலே சாயும்; இன்னொன்று முதுகிலே தொங்கும்; பிறிதொன்று தலையைப் பிடித்துக் கொண்டு கையாகிய ஏணிப்படி வழி