146
8
இளங்குமரனார் தமிழ்வளம் – 8
வாழ்வும் தாழ்வும் தங்களைச் சேர்ந்தது அன்றி
அவள் வேறில்லை.
இக்கடிதம் எழுதியபின் எனக்குச் சற்று அமைதி யுள்ளது. நல்லவர் ஒருவர் கையிலே ஒப்படைக்கும் படியான பேற்றைக் காலம் எனக்குச் சுட்டிக் காட்டியதே என்பதுதான் அமைதிக்குக் காரணம். அந்த அமைதியிலே என் மூச்சும் அமைதியாக ஊசலாடுவதும் எனக்குத் தெரியாமல் இல்லை.
தங்களை நெஞ்சார நினைக்கும்
அன்பன், செல்லப்பன்.
நிறைமதி இல்லம் கடமலைக்குண்டு
மங்கலம் அம்மையாரும் ஆறுமுகமும் உடனே கடமலைக் குண்டு வந்து சேர்ந்தனர். செல்லப்பன் படுக்கையில் கிடந்து கொண்டே கைதூக்கி வணங்கினான். தன் நெற்றியிலே கூப்பி வைத்த கையை எடுக்கவும் முடியாதவனாகக் கிடந்தான். ஆறுமுகம் தான் கையையெடுத்து மார்பின் மீது கிடத்தினார். அவன் நிலைமை கண்டு ஆறுமுகம் கண்ணீர் பெருக்கினார். கண்ணீர்த் துளிகள் சில செல்லப்பன் மீதும் பட்டன. அதனை உணரச் செல்லப்பனால் முடியவில்லை.
செல்லப்பனை நினைத்து அழுது கொண்டிருந்த செல்வியின் பக்கத்தில் மங்கலம் அம்மையார் உட்கார்ந்திருந்தார். “இது யார்?” என்று சுவரைச் சுட்டிக் காட்டினார் அவர். “நான்தான் இந்த ஊருக்கு வந்த புதிதில் எடுத்த படம்; எனக்கு அப்பொழுது எட்டு ஒன்பது வயதிருக்கும்” என்று அழுகை கண்ணீருக் கிடையே கூறினாள் செல்வி. “உன் படம் தானா?" ஆவலோடு கேட்டார் மங்கல அம்மை. செல்லப்பன் மூடியிருந்த கண்களைத் திறந்து ‘ஆம்' என்றான். “என் செல்வி இவள்தான்; என்றார் மங்கலம். "செல்வியா?" என்றார் ஆறுமுகம். “ஆம்; இந்தப் படத்தைப் பாருங்கள்” என்று சுவரைக் காட்டினார் அம்மையார். 'செல்வி' என்று கத்திக் கொண்டு, ஓடிப் போய்த் தழுவிக் கொண்டார் ஆறுமுகம். மதுரை எங்கே? கடமலைக் குண்டு எங்கே? திருவிழாவில் காணாமல் போன செல்வி, என் செல்லப்பனிடம் வளர்ந்திருக்கிறாள் “வியப்பின் உச்ச நிலையிலே நின்று பேசினார். “நம் செல்வியா இவள்? நான் பேறு பெற்றவன்”