66
2. அன்பின் வழியது உயர்நிலை
‘வயலூர் அவரைக் கொல்லைப் பொம்மை நினைவில் இருக்கிறதா? அதை மறக்கவா முடியும்?” என்று வேலப்பன் கண்ணுசாமியைப் பார்த்துக் கேட்டான். “நீதான் அதை மறக்கமாட்டாயே! எனக்குக் கேட்டுக் கேட்டுக் கசந்து போய்விட்டது” என்று சலிப்போடு கூறினார் கண்ணுசாமி. "என்ன இருந்தாலும் சாதாரணமாகக் குச்சி, வைக்கோல், கந்தல் துணி, இவற்றைக்கொண்டே செய்திருந்த அந்தப் பொம்மை எவ்வளவு அழகாக இருந்தது. நானும், பார்த்ததும் பார்த்தேன் வயலூர் அவரைக் கொல்லைப் பொம்மை போலக் கண்டது இல்லை" என்று ஒரு முடிவுக்கு வந்தவன் போலத் தனக்குத் தானே உறுதி செய்து கொண்டான் வேலப்பன்.
எதையும் கூர்ந்து கவனிக்கக்கூடியவன் வேலப்பன். எளிதில் விடமாட்டான். முற்ற முடியத் தெளிவாகத் தெரிந்த பின்னரே ஓய்வான். பின்பு அதனை மறக்கவும் மாட்டான்.நாள் ஒன்றுக்குப் பத்துத் தரமாவது சொன்னால் தான் அவன் வாய் சும்மா இருக்கும். அவரைத் தோட்டத்தில் நிறுத்தி வைத்திருந்த துணிப் பொம்மையைக் கண்ணுசாமி வேலப்பன் இரண்டு பேருமே ஒரே சமயத்தில் காணத்தான் செய்தார்கள். "கண்ணேறு பட்டுவிடக்கூடாது என்பதற்காக வைக்கப்பட்டது துணிப்பொம்மை” என்று சொல்லிக்கொள்வார்கள். ஆனால் “இரவுப் பொழுதில் யாரோ ஒருவர் காவலுக்கு நிற்பதுபோல் தோன்றிக் கள்வர்களைக் கதிகலங்கச் செய்துவிடும்" என்பதும் ஓர் உள்ளெண்ணம். எது எவ்வாறாயினும் வயலூர்ப் பொம்மை நன்றாக வாய்த்துவிட்டது. கலையழகு தவழ அமைந்துவிட்டது! பாதை வழி போய் வருபவர்கள் எவரும் உள்ளத்தைப் பறிகொடுத்து நின்று பார்க்காது போனது இல்லை! இவ்வாறிருக்கும் அழகுப் பொம்மையை வேலப்பன் கண்டால் விடவா செய்வான்? உற்றுப் பார்த்து உள்ளத்தைப் பறிகொடுத்து விட்டான்! அதன் அழகுக்காக கலைக்காக! ஆனால் கண்ணுசாமியோ ஆராய்ச்சியாளர்; எதையும் சிந்திப்பார். வேலப்பனைப்போல் ‘அழகு, கலை’ என்று உளறிக் கொட்டிக் கொண்டிருக்கமாட்டார்.