உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

இளங்குமரனார் தமிழ்வளம் 9

"நெற்பயிர் விளை” என்னும் மொழிபோற்றி நடவு செய்த ஒருவன் கதிர்விடும் நாளை எதிர்நோக்கி இருந்தான்; கதிரும் வெளிவந்தது. காவற்காரன் ஓடிவந்து "ஐயா, நம் வயலில் நெற்பயிர் கதிர் வாங்கியுள்ளது; ஆனால் எல்லாம் பாலடையாப் பதராய் உள்ளது!" என்கிறான். நெற்பயிர் விளைத்தவன் நெஞ்சம் எவ்வாறாகும்? 'உன் மகன் பதர்' என்ற போது தாய் அடைந்த துயர்நிலையில் இவன் நிலை அடையுமல்லவா! இவ்வுணர்ச்சி ஏற்படாத உழவன் உழவனும் அல்லன்; பெற்றோர் பெற்றோருமல்லர்!

“மகன் பதர்” என்னும் பட்டம் பெறுவது எப்பொழுது? கோடி செல்வம் தேடித் திரட்டி வைக்காததாலா? கொல்லும் புலியை வெல்லாததாலா?

ஊக்கமுடன் வரும் படையைத் தாக்கி அழிக்காததாலா? அறிவுப் போட்டியிலோ ஆற்றல் போட்டியிலோ திறம் இழந்ததாலா?

இவ்வகைகளால் என்றால் பல்லாயிரம் பல்லாயிரம் பேர்கள் பதர்களாக நேரிடலாம். உடல்வலு, உணர்ச்சி, ஒள்ளிய அறிவு இல்லாத அனைவரும் பதரே என்றாக நேரிடும். ஆனால் பதர் என்று எவரைக் குறிப்பிடுகின்றனர்?

"பயனில்லாத சொற்களைச் சொல்பவன் பதர்; பயனில்லாத சொற்களைக் கேட்டுத் தலையசைப்பவன் பதர்; பயனில்லாத சொற்களைத் தான் விரும்பிக் கேட்டதுடன் பிறர் விரும்புமாறு பேசிப் பொழுது போக்குபவன் பதர்; இவர்களுக்குத் துணை நிற்கும் அனைவரும் பதர்."

இவர்களைப் பதர் என்று கூறினால் என்ன? இந்த எளிய காரியத்தையும் செய்ய முடியாத இவர்களை ஆயிரம் முறைகள் பதர் என்று பழிக்கலாம்; குற்றம் இல்லை. அரிய மானிடப் பிறவியுற்று, குறுகிய நாள் வாழ்ந்து, பெரும் பெருங் கட்டுப் பாடுகளைச் செய்ய வேண்டிய வாழ்வில் வீண் அரட்டை வம்புப் பேச்சுக்களிலும், வெற்று ஆரவாரப் பேச்சுக்களிலும் தலையிட்டுக் கெடுக்கும் ஒருவனை -ஒருத்தியைப் -பதர் என்பது போன்ற தகுதிப் பட்டம் வேறு இல்லை!

நெல்லோடு நெல்லாக வளர்ந்து நெல்லோடு நெல்லாகக் காட்சியளிக்கிறது நெற்பதர்!