30. துன்புறுத்தாத் துறவு
உயிரைத் தந்தேனும் கொண்ட உறுதியைக் காப்பாற்ற வேண்டும்' என்பதே கொள்கையாம். எதிர்ப்படும் இடையூறுகளை எண்ணி இடைமுறிந்து விடுவது கொள்கையாகாது; முறிந்து விடுபவனும் கொள்கையாளன் ஆகமாட்டான்.
உண்மையான கொள்கையாளன், கொண்ட கொள்கையை நிறைவேற்றுவதில் கொள்ளும் அக்கறையில் குறையாத அளவு, கொள்கை நிறைவேற்றப் பெறவேண்டிய வழிதுறைகளிலும் அக்கறை செலுத்துவான். எப்படியும் 'கொள்கை நிறை வேறுவது' ஒன்றே அவன் குறிப்பாக இருக்காது. முறை கேடாம் வழியால்தான் தன் கொள்கை நிறைவேற்றப் பெற்றாக வேண்டும், இன்றேல் இல்லை என்னும் ஒரு நிலைமை எய்துமானால் அதற்காக அக் கொள்கையை நிறைவேற்றாமல் விடுவானே அன்றிக் குறுக்கு வழியிலே போகான்.
புலியைப் பற்றிய செய்தி ஒன்றுண்டு. காட்டு விலங்குகளைச் சாடி உண்பது அதற்கு இயல்பு. வாலைச் சுழற்றித் தாவி எதிர்ப் பட்ட விலங்கை அடித்து, மேலே தூக்கி எறியுமாம். அவ்வாறு எறியுங்கால், மேலே சென்ற விலங்கு தனக்கு வலப்புறம் வீழுமாயின் உண்ணுமாம். இடப்புறம் வீழ்ந்தால் அதனை உண்ணாதது மட்டுமின்றி, அன்று முழுவதுமே உண்ணாது பட்டினி கிடந்து, மறுநாள் வேறொன்றை வலம்பட வீழ்த்தி உண்ணுமாம்! இச் செய்தி புலியின் கொள்கை அழுத்தத்தையும், முறையான வழிச் சிறப்பையும் நன்கு உணர்த்தும்.
'எப்படியும் வாழலாம்' என்பது கொள்கையாளியின் கோட்பாடன்று! "இப்படித்தான் வாழ வேண்டும்” என்னுங் கொள்கை உறுதிகொண்டு வாழ்பவனே கொள்கையாளி! புலியன்ன கோட்பாட்டாளன்! இதனால்தான் சங்கப் புலவன் ஒருவன் சாற்றினான். "விளைந்த வயலைத்தேடி. வளைந்து முதிர்ந்த கதிரைக் கொய்து உணவாகத் தன் இருப்பிடத்தில் நிறைத்து வைக்கிறது எலி. இத்தகைய எலியைப் போன்ற அற்ப முயற்சியால் பெரும்பொருள் திரட்டிப் பிடித்துச் சேர்த்து