36. வகுத்தான் வகுத்த வகை
ஆறு ஓடுகிறது; அவ்வோட்டத்தின் இழுப்புக்கு ஆட்படும் பொருள்களும் ஓடுகின்றன. ஓட்டத்தோடு ஓட்டமாகப் போவது மிக எளிது; எதிர்த்துப் போவது அரிது; நீரோட்ட ஆற்றலினும் மிகுதியான ஆற்றல் உண்டாயின் எதிரோடலாம். என்ன முயன்றும் எதிர்த்துச் செல்ல முடியாத கடுமையான வெள்ளப்பெருக்கும் உண்டு!
காலமும் இத்தகைய நீரோட்டமாகவே உள்ளது. கால வெள்ளத்தில் உயிர்கள் இழுபட்டுச் செல்லும் பொருள்களாக இருக்கின்றன. காலத்தின் இழுவைப் போக்கிலே இசைந்து போவது எளிது. அதனை எதிர்த்துச் செல்லுவது அரிது; எதிர்த்து வெற்றி காண்பது அரிதினும் அரிது. அரிய அதனைச் செய்பவர்கள்தான் உயர்ந்தவர்கள் ஆகின்றனர். அவர்களையே 'உலகம்' என்று பெரியவர்கள் மதிக்கின்றனர். "உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே" என்பது முந்தையோர் மொழி!
துரும்பும் வெள்ளத்தால் இழுக்கப்படுகிறது; பெரிய கட்டையும் இழுக்கப்படுகிறது; சிறியவர்களும் கால வெள்ளத்தால் இழுக்கப்படுகின்றனர்; பெரியவர்களும் இடம், பொருள், ஏவல் வாய்ப்பு உடையவர்களும் கால வெள்ளத்தில் அகப்பட்டுத் தத்தளிக்கின்றனர். காலவெள்ளத்தின் ஆற்றலை இது காட்டும்! எனினும், மீன் மட்டும் என்ன வெள்ளப் பெருக்கு ஆயினும் எதிர்நீச்சல் அடிக்கும். இது மீனின் திறத்தைக் காட்டும்! கால வெள்ளத்தை நீந்திக் கரையேறுபவர்கள் உளர் என்பதை மீன்கள் காட்டும்! மீனுக்கு எதிர் நீந்தல் இயல்பு போல, உரம்படைத்த பெரியவர்களுக்கும் கால வெள்ளத்தை எதிர் நீந்திச் செல்லுதல் இயல்பு
கால வெள்ளம் ஓர் ஒழுங்குபடுத்தி வைக்கப்பட்ட அமைப்பு உடையது. ஒழுங்குபடுத்தி வைக்கப்பட்ட அமைப்பை 'ஊழ்' என்பர். முறைமை, விதி, வினைப்பயன், வகுத்த வகை, இன்னவாறெல்லாம் கூறுவர். பெயர்கள் பல! பொருள் ஒன்றே!