உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கட்டுரைகள்

17

நினைப்பது இல்லை; அருகில் வருவோர், அடுத்து இருப்போர், அன்பு மனைவி, அருமைக் குழந்தை வெறுப்பதைப் பற்றிக் கவலைப்படுவது இல்லை. இதயத்துள் நாள்தோறும் புகை ஏறிப் படிந்து படிந்து வெதுப்பி வெதுப்பி சயமாகவும், தகையாகவும் உருவாகி, ஊனை உருக்கி உள்ளத்தைக் கெடுத்து உயிருக்கு உலை வைப்பதை உன்னுவது இல்லை. இத்தனைக்கும் காரணம், போலி இன்பம் அவன் விரும்பும் பொருளாகப் போய்விட்டதே!

கடும் உழைப்புக்கு ஆளானவனும் கொடுங்கவலைக்கு ஆளானவனும் அவற்றை மாற்றுதற்கு முதலாவதாகக் கள்ளை மதுவகைகளை - அருந்துகிறான். மதியை மயக்கும் மது வகையால் அலுப்பும் கவலையும் அகலக் காணுகின்றான். அதுவே அமிழ்தாக அவனுக்கு ஆகின்றது. அதன் முதிர்ச்சியால் குடியன் ஆகின்றான். மேலும் முதிர முதிர குடிகெடுகின்றது.

குழலையும் யாழையும் வெல்லும் மழலை மொழியும் குழந்தையையும், இன்ப துன்பங்களில் இணைந்து பங்கேற்று நிற்கும் இல்லாளையும், ஈன்றெடுத்து இன்புறப் பேணி நின்ற தாயையும், அரும் பாடுபட்டுப் பெருநலம் விளைத்து நின்ற தந்தையையும், அற்ற காலத்து நற்றுணையாம் சுற்றத்தினரையும் கண்போலமைந்த நண்பர்களையும், ஏசிப்பேச, அடித்து உதைக்க, ஏவுகின்றது மதுவகை! இதுவா இன்பம்? யாருக்குத் தான் இன்பம்? அருந்தியவனுக்கு இன்பமா? அடுத்திருந்தவருக்குத் தான் இன்பமா?

இத்துணைத் துன்பங்கள் இணைந்திருந்தும் "இஃதே ன்பம்" எனக் குடியர்கள் கருதக் காரணமென்ன?

இன்ப துன்பங்கள் அவரவர் மனநிலை, வளர்ந்த நெறி இவற்றைப் பொறுத்தன. பல்வேறுபட்ட மன நிலையும் வளர் நெறியும் உடைய உலகில் எப்படி ஒன்றுபட்ட இன்பநிலை காணமுடியும்?

பெரியர் இன்ப நிலைக்களம் வேறு; சிறியர் இன்ப நிலைக் களம் வேறு; தாயன்பன் இன்ப நிலைக்களம் வேறு; பேயன்பன் இன்ப நிலைக்களம் வேறு; முயற்சியாளன் இன்ப நிலைக்களம் வேறு; சோம்பன் இன்ப நிலைக்களம் வேறு; அறிஞன் இன்ப நிலைக்களம் வேறு; அறிவிலி இன்ப நிலைக் களம் வேறு!

பூ மணம் உடையதா? மீன் மணம் உடையதா? எது விரும்பும் மணம்? எது வெறுக்கும் மணம்? - நாற்றம்! ஒரு சிறுகதை; தவப்பெரியார் இராமகிருட்டிணர் உரைத்தது.