உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. இனிய சோலை

...

'சோலை' இதனை நினைக்கும் பொழுதே எவ்வளவு இன்பம்! செடிகளும் மரங்களும் வரிசை வரிசையாக இருப்பதும், வகை வகையான வண்ணமலர்கள் வனப்புற அமைந்திருப்பதும், இளந்தென்றல் இனிதுறத் தாலாட்ட, பூவும் கொடியும் இலையும் தளிரும் அசைந்தாடுவதும், பண்ணோடிசைத்துத் தண்தேன் பருக வண்டுகள் திரிவதும் கண்டோர்க்குக் கழி பேருவகை செய்யும் என்பதில் ஐயமில்லை.

சோலை அழகை நுகர்வதால் கண்ணுக்கு இன்பம்! ஆங்கு எழுப்பும் வண்டொலியும் பிறவொலிகளும் செவிக்கு இன்பம்! மலர்மணம் தென்றலோடு தவழ்ந்து வருவதை நுகரும்போது மூக்கிற்கு இன்பம்! மெய்யொடு தழுவி மீதூர்ந்து வரும் இளங் காற்றை அனுபவித்தலால் உடலுக்கு இன்பம்! நறுஞ்சுவைப் பழங்களை விருந்தென அருந்தலிலே நாவிற்கு இன்பம்! இப்படி ஐம்பொறிகளும் கண்டும் கேட்டும் உண்டும் உயிர்த்தும் உற்றும் இன்புற உதவுவது சோலையே!

இத்தகைய சோலையின் வனப்பில் உள்ளம் இழவாதவர் உண்டோ? "நிழல் அருமை வெயிலில் தெரியும்" என்பர். வெறு நிழலே அரிய இன்பம் அளிப்பின் ஐம்புல இன்பமும் அளிக்கும் அழகுக் சோலை எதற்கு அருமைப்பாடு உடையதாம்! அதிலும், நோக்கும் ட டமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் மணற் பரப்பில் ஒதுங்குவதற்கு ஓரிலை நிழலும், நாவை நனைப்பதற்கு ஒரு துளி நீரும் கிடைக்காத பாலைவெளி நடுவே. ஒரு நீரூற்றுப் பசுஞ்சோலை காணப்படுமாயின் அஃது எத்தகு இன்பம் பயக்கும்! இந்நிலைக்கு ஆட்பட்டு நின்றோர்க்கு அன்றி மற்றையோர்க்குக் கற்பனை செய்தும் காண்பதும் அரிதாம்!

இப்பாலைவனப் பசுஞ்சோலை போலவே இவ்வுலகப் பெரும்பரப்பில் இல்வாழ்க்கை உள்ளது. வெதுப்பிற்கு நிழலும், தகைப்பிற்கு நீரும், பசிக்குச் சோறும், நோய்க்கு மருந்தும் தரும் இடமாக மட்டுமா இல்லம் இருக்கிறது?