உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கட்டுரைகள்

23

பெட்டை என்றும் குட்டி என்றும் இனம் என்றும் அன்பு காட்டும் அளவுடன் விளங்கும் பறவையும் நிற்கலாம்; குற்றம் ல்லை; ஏனெனில் அதற்குப் பகுத்தறிவும், அதன் விளைவாம் உள்ளொளியும் இல்லை! மனிதனுக்கும் இந்நிலை இருத்தல் கூடாது அல்லவா!

அன்பு காட்டுதல் இல்வாழ்வின் பண்பு! முழுக்க முழுக்க அதுதான் பண்பு! ஆனால் அவ்வன்பு ஊரையும் உலகையும் ஒன்றாய் எண்ணி வளைத்து நிற்க வேண்டும். தொடக்க நிலை தன்குடும்பம், தன்பெண்டு, தன் சுற்றம் ஆகலாம்! ஆனால் இறுதி நிலை அல்லது முடிநிலை யாதும் ஊரே யாவரும் கேளிர் என்னும் பெருநிலைக்கு வளர்தல் வேண்டும்.

இவ்வாறு எல்லோரிடையும் அன்பு பெருகி வளராமைக்குக் காரணமென்ன? அன்பு தன் வீட்டொடும் தெருவொடுந் நிற்கக் காரணமென்ன? இனத்தொடும் நிறத்தொடும் அமையக் காரணமென்ன?

அன்பின் முழுமையும் வெளிப்படா வண்ணம் உள்ளத்தே சில மாசுகள் மூடிக்கிடக்கின்றன. அம் மாசுகளை அகற்றினோர் அன்பு விரிகின்றது. அகற்றார் அன்பு, அளவில் சுருங்கி வட்ட மிடுகின்றது.

உள்ளத்தை மூடிக்கிடக்கும் மாசுகள் யாவை?

அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் ஆய நான்குமே மாசுகள். அதாவது பொறாமை, ஆசை, கோபம், கொடுஞ்சொல் என்பவையே அவை. வை குடியிருக்கும் உள்ளத்தில் தூய்மை உறையுமா? தொண்டு திகழுமா? உலகெல்லாம் ஒன்றாய் எண்ணும் தாயுள்ளம் தங்குமா?

சில கிணறுகளைக் காண்கிறோம்; தூசியும், பாசியும் வழுக்கும் அமைந்துகிடக்கின்றன. அக்கிணற்றுப் பக்கங்கள் சரிந்தும், பாதைமூடியும், தேடுவார் இன்றி, எடுப்பார் இன்றிக் கிடக்கின்றன. எட்டித் தொலைவில் செல்வோர் மூக்கையும் உறுத்தும் அளவுக்கு நாற்றம் மிக்க கட்டுக்கிடையாகிக் கிடக் கின்றன.

சில கிணறுகள் கீழே கிடக்கும் சிறு மணலையும் தெளிவாக ஒளிவிட்டுக் காட்டும் பளிக்கு நீர் உடையதாகிக் காணப்படுகின்றது. அயர்ச்சியுடன் வந்தோர்க்கு ஆரமுதாகி அருத்துகின்றது.