10. இரும்பும் கரும்பும்
கற்கண்டு கையிலே இருக்க அதைத் தின்ன மாட்டாமல் கருங்கல்லைத் தேடி எடுத்து, வாயில் போட்டுப் பல்லை உடைத்துக் கொள்ளலாமா?
கரும்பைக் கையிலே வைத்துக் கொண்டு அதனைத் தின்ன விரும்பாமல் எங்கோ தேடி அலைந்து இரும்பினை எடுத்துப் கடித்துப் பல்லைத் தவிடு பொடி ஆக்கலாமா?
காய்ந்த பலாவின் கனியுண்ண மாட்டாமல் ஈச்சம் பழத்திற்கு இடருற்று இளைக்கலாமா?
மல்லிகைப் பூவை மடியகத்து வைத்துக் கொண்டு புல்லிய எருக்கினை எடுத்துத் தொடுத்துச் சூடலாமா?
கவிந்து நிற்கும் தோட்டத்துச் சந்தன மரநிழலை விடுத்துக் காட்டகத்தே நிற்கும் கற்றாழை நிழலை நச்சிச் செல்லலாமா?
-
இவையனைத்தும் ஆகாதவை வேண்டத் தகாதவை என்றால் இன்னும் சற்றே எண்ணிப் பார்க்கத் தான் வேண்டும்.
உயரிய தலைவர்; உரிமை மிக்க இல்லம்; வீட்டிலுள்ள ஒவ்வொருவர் விருப்புக்கும் தேவைக்கும் ஏற்ற வளங்கள்; வாய்ப்புக்கள். எத்தகைய குறைவும் இல்லை எவருக்கும் ; எந்த வகையிலும்!
அடக்குவோர் இல்லை; அடங்கி நடக்க அவசியம் ல்லாமையால் அடங்குவோரும் இல்லை. உரிமை ஆட்சி செலுத்தும் இடத்தே அடங்குதலுக்கும் அடக்குதலுக்கும் வேலை ல்லை அல்லவா!
நல்ல தலைவரது ஆட்சிக்கு உட்பட்ட அவ் வீட்டிலே பயன்பொருள்கள் உண்டு; கண்ணைக்கவரும் கவின் பொருள்களும் உண்டு. வாழ்ந்தால் மட்டும் போதாது, கண்டோர் வியக்க வாழவேண்டும் என்பது அவர் கருத்து. அதுபோலவே உண்டால் மட்டும் போதாது, உரிய முறையால் உடலோம்பும் முறையால் பிறர் பின்பற்றும் முறையால் உண்ணவேண்டும் என்பது அவர்