திருக்குறள் கட்டுரைகள்
61
நம் மனமே தோட்டம்; சின்னஞ்சிறிய தோட்டம்! இத் தோட்டத்திற்கும் முன் கண்ட மூவகைக் காவல்களும் வேண்டும். ஒன்று தவறினாலும் பேரிழப்பேயாம்!
மனத்தை உள்ளிருந்து கிளம்பும் கோபம் காமம் முதலாம் உணர்ச்சிகள் கெடுக்கலாம்.
வெளியே யிருந்து பழகும் நண்பர்கள், பார்க்கும் காட்சிகள் ஆய சூழ்நிலைகளும் கெடுக்கலாம்.
உள்ளிருந்தே உருவாகி வரும்—கருவொடு பற்றிவரும்- நோய் நொடிகளும் இயற்பண்புகளாகிய மரபு நிலைகளும் கெடுக்கலாம்.
இம்மூன்று வகைக் கேடுகளும் பற்றாமல் தக்க வழித் தக்கவழிக் காத்தோம்பினால் ‘மனநிலம்' மாண் நிலம் ஆகும்! ஆங்கு அறப்பயிர் செழிக்க வளரும்! இன்பப் பயன் எளிதில் கிட்டும்! முறைபெறக் காக்க வேண்டுமே!
தோட்டத்தைக் காப்பது எளிது ஆகலாம். மனத்தைக் காப்பது அரிது அல்லவா எனலாம். ஆம்! மனத்தைக் காத்தல் அரிதினும் அரிது என்றும் சொல்லலாம்; அதே வேளையில் எளிதினும் எளிது என்று சொல்லவும் வேண்டும். அவரவர் உள்ளத் திண்மையைப் பொறுத்ததே அது.
மனக்காவலில் முதற்காவல் மனத்தின் வாயில்களைக் காத்தல்; மனவாயில்கள் வாய், கண், மெய், செவி, மூக்கு என்னும் ஐந்துமாம். இவற்றை எப்படிக் காப்பது?
இவ்வாயில்கள் வழியாக ஏற்படக்கூடிய சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்னும் உணர்வுகளைத் தக்கவாறு அடக்கிக் காப்பதே மனக் காவலாகும்.
அடக்குதல் வேண்டுமா? அடங்குதல் வேண்டுமா?
அடக்குதல் முதல்நிலை; அடங்குதல் முடிநிலை.
ஒடுக்குதல் முதல்நிலை; ஒடுங்குதல் முடிநிலை. அடக்கி அடக்கி, ஒடுக்கி ஒடுக்கிப் பழகித் தன் இயற்கையாகிவிட்ட காலையில் அடங்குதலும் ஒடுங்குதலும் இயற்கையாகிவிடும். அடக்குதலும் ஒடுங்குதலும் உள்ள அருமைப்பாடு அடங்கு தலிலும் ஒடுங்குதலிலும் இல்லை. ஏனெனில் பழகிப் பழகி இயற்கையாகிவிடுகிறது.