பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாட்டியின் அறிவுரை

17


லேயே படுத்துத்தூங்குவேன். எனவே அவர்களோடு எழுந்து பல்துலக்கிக்கொண்டு, நானும் காலையில் பூப்பறிக்கச்சென்று விடுவேன். திரும்பிவர மணி ஏழுக்கு மேலாகிவிடும். வந்ததும் வீட்டில் ‘அம்மா’ காலை எழுந்து படிக்காது போய்விட்ட தற்காகத் திட்டுவார்கள். நான் ஆற்றுக்கு ஓடி விடுவேன். குளித்துவந்து பிறகு படித்துச் சாப்பிட்டுவிட்டுப் பள்ளிக் கூடம் சென்றுவிடுவேன். வீட்டில் எனது தாத்தா இறந்த பிறகு -எனது ஐந்துவயதுக்குமேல் - அவருடன் ஒன்பது மணிக்குச் சுடச்சுடச் சாப்பிட்ட நிலை மாறிவிட்டது. காலையில் ‘பழையது’ போடுவார்கள். ஊறுகாயுடன் பழையதைச் சாப்பிட்டுவிட்டுப் பள்ளிக்கு ஓடிவிடுவேன்.

என் பாட்டி என் வாழ்வில் மிகுந்த அக்கறை காட்டுவார்கள். அதனால் சில சமயங்களில் என் அம்மாவுடன் ‘சண்டை’ போடுவதுகூட உண்டு. என் அம்மாவுக்கும் பாட்டிக்கும் என்னை வளர்ப்பதின் நோக்கம் ஒன்றாக இருந்தும் வளர்க்கும் முறையில் வேறுபாடு உண்டு. அம்மா என்னை நன்றாக அடித்து உதைத்து வளர்த்து நல்லவன் ஆக்க வேண்டும் என்று நினைப்பார்கள். பாட்டியோ அடிக்காது உதைக்காது அன்பினாலேயே வளர்த்து நல்லவனாக்க முடியும் என்று நம்பினார்கள். எனவே அம்மா என்னை அடிக்கும் போதெல்லாம் பாட்டி ‘சிபாரிசு’க்கு வருவார்கள். இதனால் அவர்களுக்குள் வார்த்தைகள் முற்றும். நான் உண்மையில் என் அடிக்கு அழுவதைவிடப் பாட்டியின் பரிவுக்காகவே கண்ணீர் விடுவதுண்டு.

எனது தாத்தா இறந்தவுடனேயே எனது அம்மாவும் பெரியம்மாவும் பங்கிட்டுக்கொண்டார்கள். எனவே என்னுடன் அம்மா, அப்பா, பாட்டி மூவரும்தான் இருந்தார்கள். அப்பா ஊரிலுள்ள சில ‘நல்லவர்’களோடு சேர்ந்து வேறு வழியில் திரும்பிவிட்டார் என்னலாம். எனவே என்னைக் கவ-