பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

இளமையின் நினைவுகள்


னித்துக் கொள்ளும் பொறுப்பு அம்மாவுக்கு அதிகமாயிற்று. அதனாலேதான் அம்மா என்னை எப்படியும் நல்லவனாக்கி முன்னுக்குக் கொண்டுவரவேண்டும் என்று ஆசைப்பட்டார். அவர்கள் அப்படியே பாட்டியும் ஆசைப்பட்டார். இருவருக்கும் இடையில் நான் எங்கள் ஊரிலேயே பள்ளிக் கூடத்தில் படித்துக்கொண்டு வந்தேன்.

பாட்டியுடன் காலையில் பூந்தோட்டத்திற்குச் செல்வேன். பகலில் ஓய்வு வேளையின்போது கத்தரித் தோட்டத்திற்குச் செல்வேன். மாலையில் கோயிலுக்குச் செல்வேன். இப்படிச் செல்லும் போதெல்லாம் அவர்கள் பலப்பல சிறு கதைகளையும் பாட்டுக்களையும் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு ‘அ,ஆ’ படிக்கத் தெரியாது; எழுத்து வாசனையே கிடையாது. என்றாலும் பல கதைகள் சொல்லுவதிலும் பண்பாட்டோடு நடந்துகொள்வதிலும் அவர்கள் திறம் வாய்ந்தவர்கள். எந்த வேளையிலும் ஓய்வாக உட்காரமாட்டார்கள். அப்போது எங்களுக்கு ஒரு மாந்தோப்பு இருந்தது. அதில் துடைப்பங்கள் உயரமாகச் செழித்து வளர்ந்து இருக்கும். அவர்கள் அந்தப் புதர்களிலெல்லாம் சென்று அவற்றைச் சேகரித்து வருவார்கள். பலர் அவர்களை இது பற்றிக் கேலி செய்தாலும் ‘நம் வீட்டுக் காரியங்களைச் செய்வதற்கு நாம் ஏன் வெட்கப்படவேண்டும்?’ என்று அவர்கள் அறிவுரை கூறி நீதி உணர்த்துவார்கள். என்னையும் அப்படியே எல்லா வீட்டு வேலையையும் செய்யச்சொல்லுவார்கள். சாமான் துலக்கும் வேலை முதல், வீடு துப்புரவு செய்யும் வேலைவரை எந்தச் சிறிய வேலையாயினும் நமக்காக நாமே செய்துகொள்வதில் தவறு இல்லை என்று கூறி அவற்றிலெல்லாம் என்னை ஊக்குவார்கள். அத்துடன் படிக்கும் வேளையில் படிப்பை நிறுத்தவும் ஒப்பமாட்டார்கள். எனவே அந்த இளம் வயதில் பள்ளிப்படிப்போடு வீட்டு வேலைகளையும் நான் கற்றுக்கொண்டே வந்தேன்.